மதுரை பைபாஸ் சாலையில் உள்ள தனிஷ்க் ஜுவல்லரி நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இந்தக் கொள்ளை வழக்கில் பட்டதாரி இளைஞரின் தந்தை சுரேஷ் மற்றும் அவரது தோழி மீனாட்சி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 6 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், மீட்கப்பட்ட 6 கிலோ தங்க நகைகள் தொடர்பான விவரங்களுடன் நகைக்கடை உரிமையாளர் பாலகிருஷ்ணன் தற்போது மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
மீட்கப்பட்ட நகைகள் கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள்தானா, அவற்றின் மதிப்பு மற்றும் அடையாளங்கள் என்னென்ன என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து கடை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிகிறது. பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கொள்ளை வழக்கில் அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
