Homeசெய்திகள்ஆன்மீகம்குன்றத்தூர், வடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: குன்றத்தூரில் 10 ஆயிரம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: வெறும்...

குன்றத்தூர், வடபழனி முருகன் கோவிலில் சூரசம்ஹாரம்: குன்றத்தூரில் 10 ஆயிரம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு: வெறும் 4 கழிவறைகள் மட்டுமே! அடிப்படை வசதிகள் இல்லாததால் பக்தர்கள் அதிருப்தி!

-

- Advertisement -

கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை அருகே உள்ள பிரசித்தி பெற்ற குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர்.

4 கழிவறைகள் மட்டுமே – பக்தர்கள் அவதி!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் குன்றத்தூர் மலைக்கோவிலில் வெறும் 4 கழிவறைகள் மட்டுமே இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த முறை மொபைல் கழிவறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த முறை அந்த வசதியும் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஆட்சிக் காலத்தில் கோவிலுக்காக தனியாகக் கட்டப்பட்ட கழிவறைகளும் இதுவரை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் இயற்கை உபாதைகளைக் கழிக்க முடியாமல் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அபாயம்!

கோவிலுக்குச் செல்லும் பாதை மிகவும் குறுகலாக இருப்பதுடன், வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகளும் முறையாகச் செய்யப்படவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இன்று மாலை சூரசம்ஹார நிகழ்வின்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, சூரசம்ஹார நிகழ்வுக்கு முன்னதாகவே கழிவறை, குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடபழனி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்!

இதற்கிடையே, சென்னை வடபழனி முருகன் கோவிலிலும் இன்று சூரசம்ஹாரம் நடைபெறுவதை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கந்த சஷ்டி விரதம் மேற்கொண்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடன்களைச் செலுத்தி வருகின்றனர்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு – 1,000 காவலர்கள் வரை குவிப்பு!

வடபழனி கோவிலில் பக்தர்களின் பாதுகாப்புக்காக காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 600 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பிற்பகலுக்குப் பிறகு இந்த எண்ணிக்கை 800 முதல் 1,000 வரை அதிகரிக்கப்பட உள்ளது.

மேலும், கண்காணிப்பு கேமராக்கள், சிசிடிவி மற்றும் ட்ரோன்கள் மூலமாக கூட்ட நெரிசலைக் காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

 

பொது தரிசனம், ரூ.100 மற்றும் ரூ.250 கட்டண தரிசனங்களுக்கு தனித்தனி வரிசைகள் அமைக்கப்பட்டுள்ளன. பால்குடம், காவடி எடுத்து வருபவர்கள், கைக்குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கோவில் வளாகம் முழுவதும் மரத்தடுப்புகள் மற்றும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டு, பக்தர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒருபுறம் வடபழனி கோவிலில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் குன்றத்தூர் கோவிலில் அடிப்படை வசதிகள் குறித்த புகார்கள் எழுந்திருப்பது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா கோலாகலம் – நவம்பர் 15-ல் சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கான பக்தர்கள் வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

MUST READ