தமிழ்நாட்டில் 15 வயதுக்கு மேற்பட்டோருக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன் மதிப்பீட்டுத் தேர்வில், ஒன்றிய அரசு நிர்ணயித்த இலக்கை விட கூடுதலானோர் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம், தமிழ்நாடு விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக அறிவிக்கப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்குச் சென்று கல்வி கற்க முடியாதவர்களுக்கு எழுத்தறிவை வழங்கும் நோக்கில், முதலில் வயது வந்தோர் கல்வி இயக்ககம் தொடங்கப்பட்டு, தன்னார்வலர்கள் மூலம் மாலை நேரங்களில் கல்வி கற்பிக்கப்பட்டது. தொடர்ந்து, பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் சார்பில் ஒன்றிய அரசின் புதிய திட்டத்தின் கீழ் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2022-23ஆம் ஆண்டு முதல் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கும் வகையில், புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் FLNAT எனப்படும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்படுகிறது.
2025-26ஆம் ஆண்டிற்கான ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் 15,00,309 பேருக்கு எழுத்தறிவு கற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களைக் கண்டறிந்து அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு மற்றும் வாழ்வியல் திறன்களைக் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
முதற்கட்டமாக 5,37,869 கற்போர் கண்டறியப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அவர்களுக்கு கடந்த 2025 ஜூன் 15ஆம் தேதி அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு நடத்தப்பட்டு, சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 9,63,169 பேர் 39,250 எழுத்தறிவு மையங்களில் சேர்க்கப்பட்டு பயிற்சி பெற்றனர். இவர்களுக்கான தேர்வு 2025 டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 15,00,309 பேர் என்ற இலக்கை விட கூடுதலாக 733 பேர் தேர்வில் பங்கேற்றனர்.
இந்த ஆண்டு 4.45 லட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர்!
இந்நிலையில், 2026-27ஆம் ஆண்டிற்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுத் திறன் மதிப்பீட்டுத் தேர்வு அண்மையில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 23,640 தன்னார்வலர்கள் மூலம் 23,640 மையங்களில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டிற்கான இலக்காக 4,31,514 பேர் நிர்ணயிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், இந்தத் தேர்வில் 98,374 ஆண்கள், 3,46,886 பெண்கள் மற்றும் 6 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 4,45,266 பேர் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் ஒன்றிய அரசு நிர்ணயித்த இலக்கை விட 13,752 பேர் கூடுதலாகத் தேர்வெழுதியுள்ளனர்.
2022-23ஆம் ஆண்டு முதல் 2027ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், கடந்த ஆண்டு 733 பேர் கூடுதலாகத் தேர்வெழுதிய நிலையில், இந்த ஆண்டு சுமார் 15 ஆயிரம் பேர் கூடுதலாகப் பங்கேற்றுள்ளனர்.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் அடிப்படைக் கல்வியறிவு பெற்றோர் விகிதம் 95 சதவீதத்தைக் கடந்திருப்பதாகவும், விரைவில் முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு அறிவிக்கப்பட உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
