பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது உடல்நிலை குறித்த கவலையை வெளிப்படுத்தி, நாட்டின் நீதித் துறை உயரதிகாரிகளுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

சிறையில் இருந்து உயிருடன் வெளியேற முடியாத நிலை ஏற்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ள அவர், தனக்கும் தனது மனைவிக்கும் உரிய மருத்துவச் சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிகளுக்கு கடிதம்:
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, மத்திய அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோருக்கு இம்ரான் கான் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளார்.
அவரது வழக்குரைஞர் சல்மான் சஃப்தர், கடிதத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 2023-ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ள இம்ரான் கான், கடந்த ஆண்டு டிசம்பர் முதல் நாளொன்றுக்கு சுமார் 22 மணி நேரம் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாகக் கடிதத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.
குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதி மறுப்பு?:
குடும்பத்தினர், வழக்குரைஞர்கள், மகன்களுடன் பேசுவதற்கும், புத்தகங்கள் படிப்பதற்கும், தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிறையில் மற்றவர்கள் தன்னுடன் பேசக்கூடாது என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் தனது ரத்த அழுத்தம் அதிகரித்ததாகவும், இதனால் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என மருத்துவர்கள் எச்சரித்ததாகவும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மனைவிக்கும் மருத்துவச் சிகிச்சை கோரிக்கை:
இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் உடல்நிலை குறித்தும் அவர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரலில் விழித்திரை பாதிப்புக்காக அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட புஷ்ரா பீபிக்கு, மீண்டும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டதால் உரிய மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சையும் கிடைக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 11-ஆம் தேதி அவரைச் சந்தித்தபோது, வெளிச்சத்தைப் பார்க்கவும் கண்களைத் திறக்கவும் அவர் சிரமப்பட்டதாகவும், உடனடியாக மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் இம்ரான் கான் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படவில்லை எனப் புகார்
உச்ச நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, தன்னை இஸ்லாமாபாத்தில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு மாற்றவும், வாரந்தோறும் குடும்பத்தினரைச் சந்திக்க அனுமதிக்கவும் சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நீதித் துறைக்கு வேண்டுகோள்:
தனக்கு எந்தவிதமான சிறப்புச் சலுகையும் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ள இம்ரான் கான், நீதிமன்ற உத்தரவுகள் முறையாக அமல்படுத்தப்பட்டு, தனக்கும் தனது மனைவிக்கும் உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதே தனது கோரிக்கை எனத் தெரிவித்துள்ளார்.
“நான் உயிருடன் இருந்தால் மட்டுமே என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடி, எனது தரப்பை நிரூபிக்க முடியும். காலம் கடந்துவிடுவதற்கு முன்பாக மனிதாபிமான அடிப்படையில் நீதி வழங்க வேண்டும்” என்று நீதிபதிகளிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்ரான் கானின் இந்தக் கடிதம், பாகிஸ்தானில் அவரது சிறைவாசம், மருத்துவ வசதிகள் மற்றும் குடும்பச் சந்திப்பு தொடர்பான விவகாரங்களை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
