Homeசெய்திகள்க்ரைம்மறுமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய ஐடி ஊழியர் கைது!

மறுமணம் செய்வதாக இளம்பெண்ணை ஏமாற்றிய ஐடி ஊழியர் கைது!

-

- Advertisement -

திருமணத் தகவல் மையம் மூலம் விவாகரத்தானவர் எனக் கூறி இளம்பெண்ணிடம் பழகி, மறுமணம் செய்வதாக ஆசை காட்டி நகை மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவான ஐ.டி. ஊழியரை சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.

 

விசாரணையில், அவருக்கு ஏற்கெனவே மனைவி மற்றும் குழந்தை இருப்பது தெரியவந்துள்ளது.

திருமணத் தகவல் மையம் மூலம் அறிமுகம்:

மதுரையைப் பூர்வீகமாகக் கொண்ட 31 வயதுடைய இளம்பெண்ணுக்குக் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஓராண்டாகக் குழந்தையுடன் தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கணவர் தரப்பிலிருந்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதால், வாழ்வாதாரத்திற்காகச் சென்னை பேரூரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளார்.

விவாகரத்து நடைமுறைகள் தொடங்கிய நிலையில், மறுமணம் செய்துகொள்ள விரும்பிய அவர், நான்கு மாதங்களுக்கு முன்பு திருமணத் தகவல் மையம் ஒன்றில் தனது விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.

டோப்பா அணிந்து இளம்பெண்ணை நம்ப வைத்தவர்:

அப்போது, தாம்பரத்தை அடுத்த செம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜீவ் (35) என்பவர் அந்தத் திருமணத் தகவல் மையம் மூலம் இளம்பெண்ணைத் தொடர்புகொண்டுள்ளார்.

தான் தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், மாதம் ரூ.85 ஆயிரம் சம்பளம் பெறுவதாகவும், ஏற்கெனவே விவாகரத்தானவர் என்றும் கூறியுள்ளார். மேலும், தனக்குப் பெற்றோர் இல்லை என்றும், தங்கைக்குத் திருமணமாகிவிட்டதால் குடும்பப் பிரச்சினைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்து இளம்பெண்ணின் நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

இளமையான தோற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் டோப்பா அணிந்து, விதவிதமான உடைகளில் எடுத்த புகைப்படங்களைத் தொடர்ந்து அனுப்பியுள்ளார். ஆதரவாகப் பேசி நெருக்கத்தை ஏற்படுத்தியதால், அவரை நேரில் சந்திக்க இளம்பெண்ணும் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நகை, பணத்தைப் பெற்றுக்கொண்டு தலைமறைவு:

இதையடுத்து, சென்னை மேடவாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் இருவரும் இரண்டு முறை சந்தித்துள்ளனர்.

அப்போது, இளம்பெண்ணின் கணவரிடமிருந்து விரைவில் விவாகரத்து பெற்றுத் தருவதாகக் கூறிய ராஜீவ், கடந்த 28-ஆம் தேதி அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால், கடந்த 13-ஆம் தேதி முதல் ராஜீவின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

அவரைத் தொடர்புகொள்ள முடியாததால் சந்தேகமடைந்த இளம்பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

ஏற்கெனவே மனைவி, குழந்தை இருந்தது அம்பலம்:

புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், செம்பாக்கத்தில் உள்ள ராஜீவின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, ராஜீவ் ஏற்கெனவே திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இதேபோன்று வேறு பெண்களிடமும் அவர் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்து விசாரிக்க, அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திருமணத் தகவல் மையங்கள் மூலம் வரன் தேடுவோருக்கு எச்சரிக்கை:

மறுமணம் செய்ய விரும்புவோர், திருமணத் தகவல் மையங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களின் குடும்பப் பின்னணி, திருமண நிலை, வேலை மற்றும் வருமானம் உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்க்க வேண்டும் எனப் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, அறிமுகமான குறுகிய காலத்திலேயே நகை அல்லது பணம் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், எந்தவொரு பணப் பரிவர்த்தனைக்கும் முன்பாக சம்பந்தப்பட்ட நபரின் விவரங்களை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் காதல் வலைவீசி 16 சவரன் நகை, ரூ.1.07 லட்சம் மோசடி – ஓசூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணைத் தவிக்கவிட்டு தப்பிய இளைஞர் ஏலகிரி மலையில் கைது!

 

 

 

MUST READ