தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.) உறுப்பினர்கள் ஓய்வு பெறும்போது, தங்களது பி.எப். சேமிப்புத் தொகையை முழுமையாக ஒரே நேரத்தில் எடுப்பதற்குப் பதிலாக, மாதந்தோறும் அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் தவணை முறையில் பெற்றுக்கொள்ளும் புதிய திட்டத்துக்கு மத்திய அறங்காவலர் குழு (சி.பி.டி.) ஒப்புதல் அளித்துள்ளது.

இதற்காக ‘முறையான பணம் எடுக்கும் திட்டம்’ (Systematic Withdrawal Plan – SWP) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகும் பி.எப். கணக்கில் உள்ள பணத்தைத் தொடர்ந்து வைத்திருந்து, தேவைக்கேற்ப தவணைகளில் எடுத்துக்கொள்ள முடியும்.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்ற இ.பி.எப்.ஓ.வின் 240-வது மத்திய அறங்காவலர் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
6.32 லட்சம் பேருக்கு முதற்கட்டப் பயன்:
இ.பி.எப்.ஓ.வின் கணக்கீட்டின்படி, 55 வயதுக்கு மேற்பட்டவர்களாகவும், ரூ.5 லட்சத்துக்கும் அதிகமான பி.எப். சேமிப்பைக் கொண்டவர்களாகவும் உள்ள சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் இந்தத் திட்டத்தின் முதற்கட்டப் பயனாளர்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை ஓய்வு பெறும்போது பி.எப். சேமிப்புத் தொகையை மொத்தமாகப் பெற்றுக்கொள்வதே நடைமுறையாக இருந்து வந்தது. புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், உறுப்பினர்கள் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப மாதந்தோறும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.
மீதமுள்ள தொகைக்கும் வட்டி கிடைக்கும்:
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், உறுப்பினர்கள் தவணை முறையில் பணம் எடுத்தாலும், கணக்கில் மீதமிருக்கும் தொகை இ.பி.எப்.ஓ.வின் முதலீட்டு அமைப்பிலேயே தொடர்ந்து இருக்கும் என்பதாகும்.
அந்தத் தொகைக்கு நடைமுறையில் அறிவிக்கப்படும் பி.எப். வட்டி தொடர்ந்து கிடைக்கும். இதனால் ஓய்வுக்குப் பிறகு ஒரே நேரத்தில் மொத்தத் தொகையையும் எடுத்துச் செலவழிக்காமல், திட்டமிட்ட முறையில் வருமானத்தைப் பெற முடியும்.
மேலும், உறுப்பினர் விரும்பினால் தவணை முறையில் பணம் பெறும் திட்டத்தை இடையில் நிறுத்திவிட்டு, மீதமுள்ள தொகையைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் புதிய திட்டத்தில் இடம்பெற உள்ளது.
குடும்பத்தினருக்கும் பயன்:
தவணை முறையில் பணம் பெற்றுவரும் உறுப்பினர் இடையில் உயிரிழந்தால், அவரது நியமனதாரர் அல்லது தகுதியுள்ள குடும்ப உறுப்பினர் மீதமுள்ள தொகையைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது தொடர்ந்து தவணை முறையில் பெறலாம் என மத்திய அறங்காவலர் குழுவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஓய்வூதியதாரரின் குடும்பத்தினருக்கும் நிதிப் பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எப்போது நடைமுறைக்கு வரும்?:
இந்தத் திட்டத்துக்கு மத்திய அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இதனைச் செயல்படுத்துவதற்கான விரிவான விதிமுறைகள், தகுதிகள், குறைந்தபட்ச இருப்புத் தொகை, பணம் எடுக்கும் கால அளவு உள்ளிட்ட விவரங்கள் இன்னும் அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு, இ.பி.எப். திட்டத்தில் தேவையான திருத்தங்கள் அறிவிக்கப்படும். அதன்பிறகே உறுப்பினர்கள் இந்த வசதியைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை தெளிவாகும்.
எனவே, பி.எப். உறுப்பினர்கள் புதிய திட்டத்தின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்கள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும்.
ஓய்வுக்குப் பிறகு பி.எப். சேமிப்பை ஒரே தொகையாகப் பெறுவதா அல்லது தவணை முறையில் பெற்றுக்கொள்வதா என்பதை உறுப்பினர்களே தீர்மானிக்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் அமைந்துள்ளது.
“பஞ்சாப் மக்கள் மாற்றத்திற்கு முழுமையாக தயார்”: சச்சின் பைலட்
