Homeசெய்திகள்ஆன்மீகம்திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 7-ஆம் நாள்: 63 அடி உயரம், 200 டன் எடை...

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 7-ஆம் நாள்: 63 அடி உயரம், 200 டன் எடை கொண்ட மகா ரதம் கோலாகல தேரோட்டம் – பக்தர்களைத் தாக்கியதாகக் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு!

-

- Advertisement -

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாளான இன்று, 63 அடி உயரமும் 200 டன் எடையும் கொண்ட மகா ரதம் லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா முழக்கத்துடன் மாடவீதிகளில் வலம் வந்தது.திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 7-ஆம் நாள்: 63 அடி உயரம், 200 டன் எடை கொண்ட மகா ரதம் கோலாகல தேரோட்டம் – பக்தர்களைத் தாக்கியதாகக் காவல்துறையினர் மீது குற்றச்சாட்டு!

அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலை அம்மனுக்கு அரோகரா என பக்தர்கள் விண்ணைப் பிளக்கும் வகையில் முழக்கமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதே நேரத்தில், தேரை வடம் பிடித்து இழுத்த பக்தர்களைக் காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கி, இழுத்துத் தள்ளியதாகக் கூறப்படும் காட்சிகள் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தின.

பஞ்சபூதத் தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

விழாவின் ஏழாம் நாளான இன்று அதிகாலை அண்ணாமலையார், உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு திருக்கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவிலில் வலம் வந்து, ராஜகோபுரம் முன்புள்ள மாடவீதியில் அவரவர்களுக்கான திருத்தேர்களில் எழுந்தருளினர்.

காலை 7 மணியளவில் திருக்கோவில் இணை ஆணையர் பரணிதரன், நகரமன்ற முன்னாள் தலைவர் இரா. ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விநாயகர் தேர் நிலையை அடைந்ததும் சுப்பிரமணியர் தேரோட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலையம்மன் எழுந்தருளும் மகா ரதம் புறப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் துணை சபாநாயகர் பிச்சாண்டி, போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், நகரமன்ற முன்னாள் தலைவர் இரா. ஸ்ரீதரன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

63 அடி உயரமும் 200 டன் எடையும் கொண்ட பிரம்மாண்ட மகா ரதத்தை பக்தர்கள் மலர் தூவி வரவேற்று, பக்திப் பரவசத்துடன் மாடவீதிகளில் இழுத்துச் சென்றனர். தேரோட்டத்தின்போது சிவபக்தர்கள் கைலாய வாத்தியங்களை இசைத்தபடி சிவதாண்டவம் ஆடினர்.

சிலர் சிவன் வேடமணிந்தும், தலையில் சிவன் உருவத்தைச் சுமந்தும் ஆடியது பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. இதற்கிடையே, மகா ரதம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆண் பக்தர்கள் தேரின் வடத்தைப் பிடித்து இழுத்து வந்தபோது, காவல்துறையினர் அவர்களைச் சரமாரியாகத் தாக்கி, அடித்து இழுத்துத் தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான காட்சிகள் அங்கிருந்த பக்தர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தின. மகா ரதம் நிலையை அடைந்த பின்னர், பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் தேரும், சிறுவர்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேரும் மாடவீதிகளில் வலம் வர உள்ளன.

தேரோட்டத்தைக் காண்பதற்காகத் திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் தலைமையில் சுமார் 4,500 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து வரும் நவம்பர் 24-ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறை முன்பு பரணி தீபமும், அதே நாளில் மாலை திருவண்ணாமலை தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளன.

தி.மலை தீபத் திருவிழா 7-ம் நாள் :  கோலாகல விநாயகர் தேரோட்டம்  

MUST READ