Homeசெய்திகள்தமிழ்நாடுஅமைச்சர் ராஜ்மோகன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநருக்கு...

அமைச்சர் ராஜ்மோகன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநருக்கு திமுக கடிதம்!

-

- Advertisement -

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை மற்றும் புலனாய்வு நடத்த அனுமதி கோரி, திமுக சார்பில் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியாகக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.அமைச்சர் ராஜ்மோகன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி ஆளுநருக்கு திமுக கடிதம்!

கடந்த நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவியைப் பெற்றுத் தருவதற்காக ஒருவர் ரூ.5 கோடி வழங்க முன்வந்ததாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், இந்தத் தகவலை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் லயோலா மணி தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சைத் தொடர்ந்து, திமுக சட்டத்துறை இணைச் செயலாளரும், எழும்பூர் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான இ. பரந்தாமன், நவம்பர் 2ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை இயக்குநரிடம் புகார் அளித்திருந்தார்.

ரூ.5 கோடி வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் நபர் யார், இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் லயோலா மணியின் பங்கு என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இன்று (நவம்பர் 23) ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 17A-ன் கீழ் விசாரணை மற்றும் புலனாய்வு நடத்துவதற்கான முன் அனுமதி கோரி, தமிழ்நாடு ஆளுநர் மற்றும் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு இ. பரந்தாமன் தனித்தனியாகக் கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், அமைச்சர் ராஜ்மோகனின் பொதுவெளிப் பேச்சு, அரசு பதவியைப் பெறுவதற்காகப் பணம் வழங்க முன்வந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முதல் பார்வையிலேயே விசாரணை தேவைப்படுவதை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 8 மற்றும் 12, மாற்றாகப் பிரிவு 7A உள்ளிட்ட பிரிவுகளின் கீழும், பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழும் விசாரணை நடத்த வேண்டிய அவசியம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நவம்பர் 2ஆம் தேதி அளித்த புகாரின் மீது இதுவரை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாகத் தனக்குத் தெரியவில்லை என்றும், புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 223-ன் கீழ் ஊழல் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் புகார் தாக்கல் செய்யவும் தயாராகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில், இந்த விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் நேரடியாகப் பங்கேற்றவர் என்றும், குற்றச்சாட்டின் அடிப்படையாக அமைந்துள்ள தகவல்கள் மற்றும் முன்மொழிவு செய்ததாகக் கூறப்படும் நபரின் அடையாளம் அவருக்குத் தெரிந்திருக்கலாம் என்றும் பரந்தாமன் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அமைச்சர் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையையும் கவனித்து வருவதால், அமைச்சரின் உரையின் அதிகாரப்பூர்வ காணொலிப் பதிவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அந்தத் துறையிடம் இருக்கக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த விவகாரத்தில் நலன் முரண்பாடு ஏற்படாமல், சுதந்திரமான விசாரணை நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், அமைச்சரை முடிவெடுக்கும் நடைமுறைகளில் இருந்து விலக்கி வைத்து, தகுதிவாய்ந்த அதிகாரி மூலம் மனுவைப் பரிசீலிக்க வேண்டும் என்றும் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்த ரூ.5 கோடி பேரம் குறித்த பேச்சு தொடர்பாக திமுக சார்பில் ஏற்கெனவே லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளரிடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ்நாடு குறித்த கனவு விஜய்க்கு இருந்திருந்தால் காங்கிரஸுடன் கூட்டணி வைத்திருக்க மாட்டார்; வைகோவே தவெகவை முடித்துவிடுவார்” – காளியம்மாள் விமர்சனம்

MUST READ