
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் தொடர்பான விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் உள்ளதாகவும், அது குறித்து ஆராய்ந்து உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மனநல மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ‘மனநல சேவைகள் மற்றும் மேம்பாடு’ குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் தாரேஸ் அகமது உள்ளிட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மனநலம் குறித்து அமைச்சர் உரை: கருத்தரங்கில் உரையாற்றிய அமைச்சர் அருண்ராஜ், மனநல பாதிப்புகள் குறித்த சமூகப் பார்வை மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் மேலும் கூறியதாவது:
“காய்ச்சல் அல்லது சர்க்கரை நோய் போல, மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால் உருவாகும் ஒரு சாதாரண நோய்தான் மனநலப் பிரச்சினை. இது சாபமோ, தீராத நோயோ அல்ல; முறையான சிகிச்சை மற்றும் மாத்திரைகள் மூலம் இதனை முழுமையாகக் குணப்படுத்த முடியும்.”
“மனநல பாதிப்புக்குள்ளானவர்களுக்குத் தங்களுக்குப் பிரச்சினை இருப்பதே தெரியாது என்பதால், அவர்களுக்குக் குடும்பத்தினரும் சமூகமும் பக்கபலமாக நிற்க வேண்டும். தனிப்பட்ட முறையில் எனது குடும்பத்திலும் ஒருவருக்கு மனநலப் பிரச்சினை இருந்தது.”
“இந்த நிதியாண்டில் 12 மாவட்ட ஒருங்கிணைந்த மனநலத் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். மாவட்ட மருத்துவமனைகளிலும் இதற்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.”

செய்தியாளர் சந்திப்பில் முக்கியத் தகவல்கள்: நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்:
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ குறித்து நீதிபதி தெரிவித்த கருத்துகள் பற்றித் தன்னால் கருத்து கூற முடியாது எனத் தெரிவித்த அவர், “அந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்தில் உள்ளது. அதில் ஆராய்ந்து உண்மை இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்: தமிழ்நாட்டில் கடந்த 7 நாட்களாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும், மழைக்கால வைரஸ் காய்ச்சல்களும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பிஸ்லெரி (Bisleri) குடிநீர் பாட்டில் தொடர்பான செய்தியைத் தான் இன்னும் பார்க்கவில்லை எனப் பதிலளித்தார்.
அரசியல் விமர்சனங்கள்: உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு ஏற்கனவே பதிலளித்துவிட்டதாகக் கூறிய அமைச்சர், ஆளுங்கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பல லட்சம் ரூபாய் செலவு செய்து திமுக வெற்றி பெற்ற நிலையில், தவெக ஒரு ரூபாய் கூடக் கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதாகவும் தெரிவித்தார்.
https://www.apcnewstamil.com/news/tamilnadu-news/thiruparankundram-deepathoon-review-petition-urgent-hearing/252054

