Homeசெய்திகள்ஆன்மீகம்திருவண்ணாமலை கோயிலில் பொது தரிசனம் திடீர் ரத்து: காவல்துறையுடன் பக்தர்கள் கடும் வாக்குவாதம்!

திருவண்ணாமலை கோயிலில் பொது தரிசனம் திடீர் ரத்து: காவல்துறையுடன் பக்தர்கள் கடும் வாக்குவாதம்!

-

- Advertisement -

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பேகோபுரம் வழியாக வழக்கமாக நடைபெறும் பொது தரிசனம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிருப்தி அடைந்தனர். கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் காவல்துறையினருக்கும் பக்தர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

திடீர் தடையால் பரபரப்பு:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். தீபத் திருநாளன்று வழக்கமாக காலை 9 மணி வரை பேகோபுரம் வழியாகப் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

ஆனால், இந்த ஆண்டு பேகோபுரம் வழியாகப் பொது தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் அறிவித்தனர். இதனால் அங்கு நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். தங்களைத் தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

கோபுரம் கோபுரமாக அலைக்கழிப்பு எனப் புகார்:

பே கோபுரம் முன்பு காத்திருந்த பக்தர்களை ராஜகோபுரம் வழியாகச் செல்லுமாறு ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜகோபுரம் பகுதிக்குச் சென்ற பக்தர்களுக்கும் தரிசன அனுமதி கிடைக்கவில்லை எனப் புகார் எழுந்துள்ளது.

கோயீலின் ஒரு கோபுரத்திலிருந்து மற்றொரு கோபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுத் தங்களை அலைக்கழிப்பதாகப் பக்தர்கள் வேதனை தெரிவித்தனர். நான்கு கோபுரங்கள் வழியாகவும் சென்றும் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

விஐபிக்களுக்கு முன்னுரிமையா?::

வெளி மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் வந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர். அதே நேரத்தில் விஐபிக்களுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து அனுமதி வழங்கப்படுவதாகவும் சில பக்தர்கள் குற்றம்சாட்டினர்.

தீபத் திருவிழாவைக் காணவும், அருணாசலேஸ்வரரைத் தரிசிக்கவும் தொலைதூரங்களில் இருந்து வந்த தங்களுக்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என அவர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டுள்ள நிலையில், தரிசனத்திற்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அனுமதி நடைமுறைகள் குறித்து தெளிவான அறிவிப்புகள் வெளியிடப்பட வேண்டும் எனப் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 1,000 மீட்டர் காடாத் துணிக்கு சிறப்பு பூஜை – மூன்றாம் பிரகாரத்தில் வைத்து வழிபாடு!

 

MUST READ