மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத் திருநாளான இன்று தீபம் ஏற்றுவது தொடர்பாகப் பரபரப்பு நீடித்து வருகிறது. தீபத்தூணில் ஒருமுறை மட்டும் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைத் தவிர்க்கும் வகையில் மதுரையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற பாஜக மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகளைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காவல்துறையினர் கைது செய்தும், வீட்டுக்காவலில் வைத்தும் தடுத்து வருகின்றனர்.
திருப்பூரில் இந்து முன்னணி அலுவலகம் முன்பு போலீசார் குவிப்பு!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இந்து முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், திருப்பூரில் இருந்து இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநிலப் பொதுச் செயலாளர் கிஷோர் உள்ளிட்ட நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் செல்வதற்காக மாவட்ட அலுவலகத்திற்கு வரத் தொடங்கினர்.
அவர்கள் தடையை மீறிப் புறப்படுவதைத் தடுக்கும் வகையில், திருப்பூர் இந்து முன்னணி அலுவலகம் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காலை 11 மணிக்கு மேல் நிர்வாகிகள் புறப்படத் திட்டமிட்டிருந்த நிலையில், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மேட்டூரில் பாஜக மாவட்டத் தலைவர் வீட்டுக்காவல்!
இதேபோல், சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி பகுதியில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்கப் புறப்பட்ட சேலம் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஹரிராமன் மற்றும் கட்சி நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தி வீட்டுக்காவலில் வைத்தனர்.
இதையறிந்த ஏராளமான பாஜக நிர்வாகிகள் ஹரிராமன் வீட்டின் முன்பு திரண்டனர். அப்போது போலீசாருக்கும் பாஜக நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
“தீபம் ஏற்றச் செல்லும்போது மட்டும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையா?”
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹரிராமன், முருகக் கடவுளுக்கு தீபம் ஏற்றும் நிகழ்வில் பங்கேற்கச் சென்ற தங்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி வீட்டுக்காவலில் வைத்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றார்.
மேலும், இந்துக் கோவில்கள் இடிக்கப்படும்போது ஏற்படாத சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, தற்போது தீபம் ஏற்றச் செல்லும்போது மட்டும் எவ்வாறு ஏற்படும் என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழகம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு தீவிரம்!
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பாஜக மற்றும் இந்து முன்னணி முக்கிய நிர்வாகிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மதுரை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
