கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், முதலமைச்சர் விஜய்தான் முதல் குற்றவாளி என அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை குற்றம்சாட்டியுள்ளார். குற்றம்சாட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை முதலமைச்சர் விஜய் தொடர்ந்து காப்பாற்றி வந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.எஸ்.இன்பதுரை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி இருப்பதாகக் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் மற்றும் துணை சபாநாயகர் தொடர்பான புகார் உள்ளிட்ட சம்பவங்களில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
120 நாட்களாக நடவடிக்கை எடுக்கவில்லை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் அதிமுக சார்பில்தான் முதலில் வழக்கு தொடரப்பட்டதாக இன்பதுரை தெரிவித்தார். பெண்களின் மாண்பைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டதாகவும், அந்த மனு மீது தமிழக அரசோ அதிகாரிகளோ பதிலளிக்காததால் நீதிமன்றத்தை நாடியதாகவும் கூறினார்.
நீதிமன்ற விசாரணையின்போது, இதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்றும் புகார் எதுவும் பெறப்படவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். ஆனால், மறுநாள் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்ததாகவும் கூறினார்.
ஜூலை 7-ஆம் தேதியே மாவட்ட ஆட்சியர் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது புகார் அளித்ததாகக் குறிப்பிட்ட இன்பதுரை, 120 நாட்களாகியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். இத்தனை நாட்களாகச் சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரைப் பாதுகாத்தது அரசுதான் என்றும் குற்றம்சாட்டினார்.
அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டு
அமைச்சர்கள் ராஜ்மோகன், நிர்மல் குமார், புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் எந்தச் சம்பவமும் நடைபெறவில்லை என்று கூறியதாக இன்பதுரை தெரிவித்தார்.
அமைச்சர்கள் இவ்வாறு பேசியது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைகளுக்கு எதிரானது என்றும், அமைச்சராகப் பொறுப்பேற்கும்போது எடுத்த உறுதிமொழியை மீறியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார். அமைச்சர்களே தலையிட்டு குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற முயன்றதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் முழுப் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.
முதலமைச்சர் விஜய் பதவி விலக வேண்டும்
234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாகத் தெரிவித்த முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக, 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட இன்பதுரை, ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தவறு செய்தால் அதற்குத் தார்மீகப் பொறுப்பை முதலமைச்சரே ஏற்க வேண்டும் என்றார்.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்தான் முதல் குற்றவாளி எனத் தாம் குற்றம்சாட்டுவதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் அமைதி காத்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவருக்குப் பாதுகாப்பு அளித்துள்ளதாகவும் விமர்சித்தார்.
மாநிலத்தின் எந்தப் பகுதியில் சிறிய சம்பவம் நடந்தாலும் அது முதலமைச்சரின் கவனத்துக்குச் செல்ல உளவுத்துறை உள்ளது என்று குறிப்பிட்ட அவர், மாவட்ட ஆட்சியர் தொடர்பான புகார் தனக்குத் தெரியாது என்று முதலமைச்சர் கூறினால், அவர் பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் என்றும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மத்திய அரசு தலையிட வேண்டும்
ஒரு நடிகை மீது அவதூறாகப் பேசியதாகக் கூறப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுத்த அரசு, மாவட்ட ஆட்சியர் புகார் அளித்தும் 120 நாட்களாக நடவடிக்கை எடுக்காதது சட்டத்தின் ஆட்சி குறித்த கேள்வியை எழுப்புவதாக இன்பதுரை கூறினார்.
இந்த விவகாரத்தில் மத்திய அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாகா குழுவிடம் புகார் அளிக்கலாம் என்றும், மாவட்ட ஆட்சியருக்கே இத்தகைய நிலை ஏற்பட்டால் அவர் யாரிடம் சென்று முறையிட முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இந்தச் சூழலில்தான் நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அதிமுக இந்த விவகாரத்தில் அரசியல் செய்யவில்லை என்றும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் ஐ.எஸ்.இன்பதுரை தெரிவித்தார்.
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் அலுவலகம் முன்பு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!
