இந்தியாவையே உலுக்கிய மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் 18-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2008-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி, பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர் கடல் வழியாக மும்பைக்குள் ஊடுருவினர்.
பின்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம், தாஜ் மஹால் பேலஸ் ஓட்டல், ஓபராய்-டிரைடென்ட் ஓட்டல், லியோபோல்ட் கஃபே, காமா மருத்துவமனை மற்றும் யூதர்களின் நரிமன் ஹவுஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல்களை நடத்தினர்.
தொடர்ந்து சுமார் 60 மணி நேரம் நீடித்த இந்தத் தாக்குதலில், பாதுகாப்புப் படையினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
பயங்கரவாதிகளை எதிர்கொண்டு போராடிய பாதுகாப்புப் படையினரில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தலைவர் ஹேமந்த் கர்கரே, மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன், கூடுதல் காவல் ஆணையர் அசோக் காம்தே, காவல் ஆய்வாளர் விஜய் சலாஸ்கர், உதவி ஆய்வாளர் துக்காராம் ஓம்லே உள்ளிட்டோர் வீரமரணம் அடைந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட 10 பயங்கரவாதிகளில் 9 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட அஜ்மல் கசாப், வழக்கு விசாரணைக்குப் பின்னர் 2012-ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.
தாக்குதலுக்குப் பின்னர் நாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்துதல், உளவுத் தகவல் சேகரிப்பை மேம்படுத்துதல், தேசியப் பாதுகாப்புப் படையின் (NSG) விரைவான செயல்பாட்டை உறுதி செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றன. இந்தத் தாக்குதல், நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு முக்கியப் பாடமாக அமைந்தது.
நாடு முழுவதும் அஞ்சலி:
18-வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மும்பையின் முக்கிய இடங்களில் வீரமரணம் அடைந்த பாதுகாப்புப் படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டு, பொதுமக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். உயிரிழந்தவர்களை நினைவுகூரும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள பதிவில், மும்பை தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவி மக்களை நினைவுகூர்வதாகவும், தங்கள் உயிரைத் தியாகம் செய்த பாதுகாப்புப் படையினருக்கு மரியாதை செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், அதில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்துவதிலும் இந்தியா உறுதியாக இருப்பதாகவும், பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை தாக்குதல், பயங்கரவாதத்தின் கோர முகத்தையும், நாட்டைக் காக்க உயிர் தியாகம் செய்தவர்களின் துணிச்சலையும் என்றும் நினைவூட்டும் துயர வரலாறாகத் திகழ்கிறது.
இந்தத் கொடூரத் தாக்குதலில்166 பேர் உயிரிழந்தனர்; அவர்களில் 18 பேர் காவல்துறையினர் மற்றும் பிற பாதுகாப்புப் பணியாளர்கள் என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
26/11 மும்பை தாக்குதல் வழக்கு: தஹாவூர் ராணாவுக்கு வீடியோ கால் அனுமதி!
