நடிகர் விஜய் சேதுபதி மகாராஜா 2 படம் குறித்த அப்டேட் கொடுத்துள்ளார்.
கடந்த ஜூன் 2024-ஆம் ஆண்டு நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் ‘மகாராஜா’ திரைப்படம் வெளியானது. கதாநாயகனை விட திரைக்கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியான இப்படத்தில் அனுராக் காஷ்யப், சிங்கம் புலி, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். விறுவிறுப்பான திரைக்கதையாலும், பல திருப்பங்களாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று அதிக வசூலை வாரிக் குவித்ததுடன், பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்றது. மேலும், இந்தப் படம் சீனா, ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேசமயம், ஓடிடியிலும் வெளியாகி ட்ரெண்டிங்கில் இருந்தது.
இந்நிலையில், சர்வதேச எம்மி விருதுகள் விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, ‘மகாராஜா’ ஹாலிவுட் ரீமேக் மற்றும் ‘மகாராஜா 2’ குறித்து அப்டேட்களைப் பகிர்ந்துள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், “‘பத்தா’ படம் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று, எனக்கும் அந்தப் படம் மிகவும் பிடிக்கும். ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. அதன் ஹாலிவுட் ரீமேக்கில் நானும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக என் தயாரிப்பாளரிடம் கூறியுள்ளேன். அவர்கள் வாய்ப்பு கொடுத்தால் மகிழ்ச்சியுடன் நடிப்பேன். நித்திலன் ஒரு சிறந்த இயக்குநர். அவருடைய எழுத்து மிகவும் சிறப்பாக இருக்கும். சமீபத்தில் அவர் எனக்கு ‘மகாராஜா 2’ படத்தின் கதையை சொன்னார். அது மிகவும் அழகாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சர்வதேச தொலைக்காட்சி கலை மற்றும் அறிவியல் அகாடமியின் வாரிய உறுப்பினர் கவிதா குப்தா, ஹாலிவுட் நட்சத்திரம் டாம் ஹாங்க்ஸ் உடனான உரையாடலைப் பகிர்ந்துள்ளார். “இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடந்த LACMA விழாவில் டாம் ஹாங்க்ஸைச் சந்தித்தபோது, இந்தியாவிலிருந்து எந்த மூன்று படங்களைப் பார்க்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் ‘மகாராஜா’ படத்தைப் பார்க்குமாறு கூறினேன். சில வாரங்களுக்குப் பிறகு நவம்பர் 7-ஆம் தேதி நடந்த இரண்டாவது LACMA Art + Film விழாவில் அவரை மீண்டும் சந்தித்தபோது, ‘என்னால் இன்னும் அந்தப் பெண்ணை மறக்க முடியவில்லை… என்ன ஒரு அற்புதமான நடிகை. என்னால் அப்படி செய்திருக்க முடியாது. நான் அந்த நபரைக் கொன்றிருப்பேன்!’ என்று அவர் என்னிடம் கூறினார்” எனத் தெரிவித்துள்ளார்.
