Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தை மறைக்க முயன்ற சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும்...

கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தை மறைக்க முயன்ற சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி வாசுகி வலியுறுத்தல்!

-

- Advertisement -

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தை ஆரம்பத்தில் மறைக்க முயன்ற சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், தனது கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காக்காமல் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நின்று மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி வாசுகி வலியுறுத்தியுள்ளார்.கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரத்தை மறைக்க முயன்ற சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வருத்தம் தெரிவிக்க வேண்டும் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி வாசுகி வலியுறுத்தல்!

இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

அதன் ஒரு பகுதியாக விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மூத்த தலைவரும், தலைமை அரசியல் குழு உறுப்பினருமான வாசுகி தலைமை தாங்கினார். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வாசுகி, 1949-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பின்னர் 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்ததாகக் குறிப்பிட்டார்.

ஜனநாயகம், இறையாண்மை, சமத்துவம் உள்ளிட்ட அடிப்படைக் கொள்கைகளையும் குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சட்டத்தை ஒவ்வொரு குடிமகனும் பாதுகாக்க வேண்டியது அவசியம் என்றார்.

மாநில உரிமைகளையும் வாக்குரிமையையும் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களும் இதுபோன்ற உறுதிமொழிகளை ஏற்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக சட்டமன்ற உறுப்பினர் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள புகார் குறித்துப் பேசிய அவர், இந்த விவகாரத்தில் மூன்று மாத கால தாமதத்திற்குப் பிறகே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது மோசமானது என விமர்சித்தார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் என்பதற்காகப் பாரபட்சம் காட்டாமல், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆரம்பகட்டத்தில் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், இத்தகைய சம்பவம் நடைபெறவில்லை எனக் கூறியது குறித்த கேள்விக்குப் பதிலளித்த வாசுகி, கள்ளக்குறிச்சி சம்பவத்தை மூடிமறைக்கவே ஆரம்பத்தில் முயற்சி செய்ததாகக் குற்றம்சாட்டினார்.

ஆட்சியில் இருப்பவர்கள் தங்களது கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுத்தால் அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் எனக் கருதக்கூடாது என்றும், யார் தவறு செய்திருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்போதுதான் மக்கள் மத்தியில் அரசுக்கு நம்பிக்கை கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்க மாட்டார் என ஆட்சியாளர்கள் நினைத்திருக்கலாம் என்றும், அந்த நம்பிக்கையில்தான் சட்டத்துறை அமைச்சர் ஆரம்பத்தில் அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் கூறிய வாசுகி, தனது கருத்தை அமைச்சர் மறுபரிசீலனை செய்து, தெரிவித்த கருத்துக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இனியாவது தவெக அரசு விழித்துக்கொண்டு, உண்மைகளை மறைக்கும் வகையில் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரத்தில் முதலமைச்சர் இதுவரை மௌனம் காத்து வருவதாகக் குறிப்பிட்ட வாசுகி, மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் சரி, சாதாரணப் பெண்ணாக இருந்தாலும் சரி, பெண்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். பாதிக்கப்பட்டவரின் பக்கம் முதலமைச்சர் நின்று, இந்த விவகாரத்தில் வெளிப்படையாகச் செயல்பட்டு மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்துப் பேசிய வாசுகி, நில அளவைக் கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த காலத்தில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையும், தற்போதைய உச்ச நீதிமன்ற உத்தரவையும் குறிப்பிட்டு, அந்த உத்தரவு நியாயமானதாக இல்லை என்ற தனது கருத்தைத் தெரிவித்தார். வழக்கமாகத் தீபம் ஏற்றப்படும் இடத்தில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி இந்த ஆண்டு தீபம் ஏற்றப்பட்டதாகக் கூறிய அவர், இதற்காக தமிழக அரசுக்குப் பாராட்டுத் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலரிடம் அரை மணி நேரம் விசாரணை – விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் நேரில் விசாரணை!

MUST READ