ஆர்யாவின் ஹலோ காதல் பட அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் ஆர்யா நடிப்பில் கடைசியாக ‘மிஸ்டர் எக்ஸ்’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்ததாக, பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள ‘வேட்டுவம்’ திரைப்படம் 2027 பொங்கலுக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘சார்பட்டா பரம்பரை 2’ படத்திலும் ஆர்யா கமிட் ஆகியுள்ளார். இதற்கிடையில், நிக்கில் முரளி இயக்கத்தில் ஆர்யா தனது 40-வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹலோ காதல் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளனர். காதல் கலந்த கலகலப்பான கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், போஸ்டர்களும், பாடல்களும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
மேலும் இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்த நிலையில், தற்போது ‘மஜா மஜா’ எனும் புதிய பாடல் இன்று (நவம்பர் 26) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் சில்வர் கிரெய்ன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு, ஜீவா சங்கர் ஒளிப்பதிவு பணிகளைக் கவனித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம், வருகின்ற டிசம்பர் 4-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
