Homeசெய்திகள்ஆன்மீகம்திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தரிசனம்: 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்!

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் தரிசனம்: 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்!

-

- Advertisement -

திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் திருக்கோவிலில், ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் ஆதிபுரீஸ்வரர் கவசம் இல்லா நிஜரூப தரிசனத்தைக் காண கடந்த மூன்று நாட்களாக 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

 

இதனால் கோவிலில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. நீண்ட நேரம் காத்திருந்த பக்தர்கள், குறிப்பாக முதியவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானதாகப் புகார் எழுந்துள்ளது.

கார்த்திகை பௌர்ணமியை முன்னிட்டு, கோவிலில் புற்று வடிவிலான சுயம்பு ஆதிபுரீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்குத் திறக்கப்பட்டது.

இதையடுத்து மூன்று நாள்கள் பக்தர்கள் கவசம் இல்லாத ஆதிபுரீஸ்வரரின் நிஜரூப தரிசனத்தைப் பெற்றனர். அர்த்த ஜாம பூஜைக்குப் பிறகு மீண்டும் கவசம் அணிவிக்கப்பட்டது.

4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்:

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் இந்த அரிய தரிசனத்தைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் இலவசப் பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்புக் கட்டண தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன.

இருப்பினும், பக்தர்கள் வருகை அதிகரித்ததால் திருவொற்றியூர் பிரதான சாலை வரை நீண்ட வரிசை காணப்பட்டது. பொதுத் தரிசனம் மற்றும் கட்டணத் தரிசனத்திற்கு வந்தவர்கள் 3 முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகப் பக்தர்கள் தெரிவித்தனர்.

விஐபி தரிசனத்தால் வாக்குவாதம்:

நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் கட்டணத் தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் அவதிப்பட்ட நிலையில், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் விஐபி தரிசனம் என்ற பெயரில் நேரடியாக உள்ளே அனுமதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.

இதனால் பொது தரிசனம் பாதிக்கப்பட்டதாகக் கூறி ஆத்திரமடைந்த பக்தர்கள், கோயில் ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முதியவர்களுக்கு மூச்சுத்திணறல்:

நெரிசலான வரிசையில் நீண்ட நேரம் நின்றதாலும், போதிய காற்றோட்டம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததாலும் முதியவர்கள் சிலர் உடல்நலக் குறைவுக்கு ஆளானதாகக் கூறப்படுகிறது.

அவர்களில் சிலருக்கு மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் முதலுதவி அளித்து உதவியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆண்டுக்கு ஒருமுறை கிடைக்கும் அரிய தரிசனத்தைக் காண குடும்பத்துடன் பல மணி நேரம் காத்திருந்தும், விஐபி தரிசனத்தால் நிம்மதியாகச் சாமி தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.

முறையான ஏற்பாடுகள் தேவை:

லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், அதற்கேற்ற கூட்ட மேலாண்மை ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று பக்தர்கள் கோயில் நிர்வாகத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

இனிவரும் காலங்களில் இதுபோன்ற விழாக்களின்போது முதியவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை உரிய திட்டமிடலுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரக்கோட்டம் முருகன் கோயில் மகா கும்பாபிஷேகம்: கச்சபேஸ்வரர் கோயிலில் இருந்து புனித நீர் கலசங்கள் ஊர்வலம்!

 

MUST READ