விஷ்ணு விஷால் நடிக்கும் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் விஷ்ணு விஷால், கடைசியாக ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் இன்னும் சில படங்களிலும் கமிட் ஆகி நடித்து வருகிறார். இதற்கிடையில், இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ திரைப்படம், தமிழ் சினிமாவின் மிக முக்கியமான கிரைம் த்ரில்லர் படங்களில் ஒன்றாக இன்றளவும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம்தான் ‘இரண்டு வானம்’.
டைம் டிராவல் கதைக்களத்தில் உருவாகி இருப்பதாகக் கூறப்படும் இப்படத்தில், விஷ்ணு விஷாலுடன் இணைந்து மமிதா பைஜு நடித்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து, தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும், படத்திலிருந்து அடுத்தடுத்து வெளியான போஸ்டர்களும், பாடல்களும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து வருகின்றன.
இதற்கிடையில் இப்படம் கடந்த அக்டோபர் மாதமே வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘இரண்டு வானம்’ படத்தின் புதிய ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் வருகிற டிசம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -
