Homeசெய்திகள்இந்தியாநாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ல் தொடக்கம்: மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்களை மீண்டும்...

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் நவம்பர் 30-ல் தொடக்கம்: மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்ய திட்டம்!

-

- Advertisement -

நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான முக்கிய மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நாடாளுமன்ற அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.

நவம்பர் 30-ல் மக்களவை கூடுகிறது

மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்ட அறிவிப்பின்படி, நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் கூட உள்ளன. இரு அவைகளின் கூட்டத்தொடரும் டிசம்பர் 3-ம் தேதி நிறைவடைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் தாக்கல் செய்யப்படும் 3 முக்கிய மசோதாக்கள்

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் நோக்கில், கடந்த ஏப்ரல் மாதம் மூன்று முக்கிய மசோதாக்கள் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.

1. அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா 2026.
2. தொகுதி மறுவரையறை மசோதா 2026.
3. யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026.

இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் போதிய ஆதரவு கிடைக்காததால் இந்த மூன்று மசோதாக்களும் நிறைவேறவில்லை.

தொடர்ந்து நடைபெற்ற மழைக்காலக் கூட்டத்தொடரிலும் அவை மீண்டும் தாக்கல் செய்யப்படவில்லை. கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி மழைக்காலக் கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் பாஜக கூட்டணிக்கு சவால்

தற்போதைய மக்களவையில் மொத்தம் 540 உறுப்பினர்கள் உள்ளனர். அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற குறைந்தபட்சம் 360 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

மக்களவையில் பாஜகவுக்கு 241 உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 319 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

மறுபுறம், காங்கிரஸுக்கு 98 உறுப்பினர்களும், அதன் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து இண்டியா கூட்டணிக்கு 183 உறுப்பினர்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுகவுக்கு 22 உறுப்பினர்கள், ஆம் ஆத்மிக்கு 3 உறுப்பினர்கள் என இரு முக்கிய கூட்டணிகளுக்கு வெளியே உள்ள கட்சிகளிடம் மொத்தம் 38 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்ற ஆளும் கூட்டணிக்கு மேலும் 41 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

மாநிலங்களவையிலும் ஆதரவு திரட்டும் முயற்சி

மாநிலங்களவையில் தற்போது 243 உறுப்பினர்கள் உள்ளனர். அரசியலமைப்புத் திருத்த மசோதாக்களை நிறைவேற்ற 162 உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும்.

இதில் பாஜகவுக்கு 116 உறுப்பினர்களும், கூட்டணிக் கட்சிகளுடன் சேர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 151 உறுப்பினர்களும் உள்ளனர். காங்கிரஸுக்கு 30 உறுப்பினர்களும், இண்டியா கூட்டணிக்கு 64 உறுப்பினர்களும் உள்ளனர்.

திமுக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட இரு அணிகளிலும் இடம்பெறாத கட்சிகளிடம் 28 உறுப்பினர்கள் உள்ளனர். எனவே மாநிலங்களவையில் மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் கூட்டணிக்கு மேலும் 11 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு வியூகம்

இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற உள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மூன்று மசோதாக்களையும் மீண்டும் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியின் உயர்நிலைக் குழுக் கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் மசோதாக்களை எதிர்த்து செயல்படுவது தொடர்பான அரசியல் வியூகங்கள் வகுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான இந்த மசோதாக்களுக்கு நாடாளுமன்றத்தில் போதிய ஆதரவைத் திரட்டுவது மத்திய அரசுக்கு முக்கிய சவாலாக இருக்கும். குறிப்பாக திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகளின் நிலைப்பாடு இந்தக் கூட்டத்தொடரில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் எப்போது தொடங்கும்? – டிசம்பர் முதல் வாரத்தில் நடத்த திட்டம்!

MUST READ