தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாக்களை மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டுவர மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் டெல்லி செல்ல உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு நவம்பர் 27-ஆம் தேதி டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணும் டெல்லி செல்ல உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெல்லியில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டம்
டெல்லியில் வெள்ளிக்கிழமை மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், சந்திரபாபு நாயுடு மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான எச்.டி. குமாரசாமி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாகவும் தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆலோசனை?
நவம்பர் 30-ஆம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ஆம் தேதி மாநிலங்களவையும் மீண்டும் கூட உள்ளன. இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுவரையறை மற்றும் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்ட முன்மொழிவுகளை மத்திய அரசு கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புத் திருத்த மசோதா தேவையான ஆதரவைப் பெறாததால் தோல்வியடைந்தது. இதையடுத்து, திருத்தப்பட்ட முன்மொழிவுடன் மீண்டும் மசோதாவைக் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தச் சூழலில், தென் மாநிலங்களின் தொகுதிப் பங்கு மற்றும் தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய அரசியல் பிரதிநிதித்துவ மாற்றங்கள் குறித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே ஆலோசனை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆந்திர முதல்வர் மற்றும் துணை முதல்வரின் டெல்லி பயணம், நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக நடைபெறுவதால் அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
