HomeBreaking Newsகைதான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் டிசம்பர் 11 வரை கடலூர் சிறையில் அடைப்பு!

கைதான தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் டிசம்பர் 11 வரை கடலூர் சிறையில் அடைப்பு!

-

- Advertisement -

பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை, டிசம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, இன்று அதிகாலை அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நியமிக்கப்பட்டார்.

கடந்த மூன்று நாட்களாக கள்ளக்குறிச்சியில் முகாமிட்டிருந்த சிருஷ்டி சிங், மாவட்ட ஆட்சியர், அவரது கணவர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர், ஆட்சியரின் உதவியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்.

வீட்டில் வைத்து கைது – 5 மணி நேரம் விசாரணை:

இதற்கிடையே, நேற்று மாலை விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான போலீசார், கள்ளக்குறிச்சியில் உள்ள எம்.எல்.ஏ. அருள் விக்னேஷின் வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தியாகதுருகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை முடிந்ததும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

டிசம்பர் 11 வரை நீதிமன்றக் காவல்:

இதைத்தொடர்ந்து, கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி முன்னிலையில் அருள் விக்னேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது, எம்.எல்.ஏ. தரப்பு வழக்கறிஞர்கள் அவருக்கு முதல் வகுப்பு சிறை வசதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதற்கு, அவர் முறையாக வருமான வரி தாக்கல் செய்திருப்பதற்கான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் முதல் வகுப்பு சிறை வசதி வழங்குவது குறித்து பரிசீலிக்கலாம் என நீதிபதி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, அருள் விக்னேஷை 14 நாள்கள், அதாவது டிசம்பர் 11-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி பானுமதி உத்தரவிட்டார்.

அதிகாலை 4.05 மணிக்கு சிறையில் அடைப்பு:

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாலை மார்க்கமாக கடலூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருள் விக்னேஷ், இன்று அதிகாலை 4.05 மணியளவில் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையொட்டி சிறை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#BREAKING கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!

MUST READ