
தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என கடந்த 20-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஏன் பின்பற்றப்படவில்லை என்பது குறித்தும், நீதிமன்ற அவமதிப்பு விவகாரம் குறித்தும் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 20-ஆம் தேதி வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்படாததற்கான காரணம் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு ஆகிய இரு விவகாரங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் இன்றைய தினம் விசாரிக்கப் போவதில்லை என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். மேலும், அனைத்துத் தரப்பு வழக்கறிஞர்களும் இந்த வரம்பைத் தாண்டி வேறு எந்த வாதங்களையும் முன்வைக்க வேண்டாம் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
மனுதாரர்கள் தரப்பு முன்வைத்த முக்கிய வாதங்கள்
விசாரணையின் போது மனுதாரர்கள் தரப்பில் ஆட்சியர் மற்றும் அறங்காவலர் குழுவின் செயல்பாடுகள் குறித்துக் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டன:
* உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான முழுப் பொறுப்பும் மாவட்ட ஆட்சியருக்கே வழங்கப்பட்டிருந்தது; தேவைப்பட்டால் துணை ராணுவப் படையினரையும் அழைத்துக்கொண்டு தூணின் மீது தீபம் ஏற்றுவதை உறுதி செய்ய ‘நோடல் அதிகாரியாக’ ஆட்சியர் செயல்பட வேண்டும் எனத் தெளிவாக உத்தரவிடப்பட்டிருந்தது.
* ஆனால், ஆட்சியர் அறங்காவலர்களுடன் உரிய ஆலோசனை நடத்தாத நிலையில், தேவஸ்தானம் மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆகம விதிகளைக் காரணம் காட்டி தீர்மானம் நிறைவேற்றி, தீபத்தூணில் தீபமேற்ற மறுத்துவிட்டனர்.
* புதிய இடத்தில் தீபம் ஏற்ற அறங்காவலர் குழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும், பழைய இடத்திலேயே தீபம் ஏற்ற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
* ஆனால், தீபம் ஏற்றுவதற்கும் அறங்காவலர் குழுவுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது; அவர்கள் அவ்வாறு கூறியிருந்தாலும் அதை ஏற்க வேண்டிய கட்டாயம் மாவட்ட ஆட்சியருக்கு இல்லை.
* அறங்காவலர் குழுவின் வார்த்தையை விட உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு குறைந்ததா எனக் கேள்வி எழுப்பிய மனுதாரர் தரப்பு, தீபத்தூணில் தீபம் ஏற்றாததை நியாயப்படுத்தவே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஆட்சியர் வேண்டுமென்றே உத்தரவை நிறைவேற்றாமல் விட்டது துரதிர்ஷ்டவசமானது என்றும் வாதிட்டது.
பெரம்பூர் தேர்தல் வழக்கில் விஜய்க்கு பின்னடைவு? வழக்கைத் தொடர உயர்நீதிமன்றம் அனுமதி!
