மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் தார் சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெறுவதாகத் தொடரப்பட்ட வழக்கில், மாநகராட்சி ஆணையர், தலைமைப் பொறியாளர், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பழைய சாலையின் மீதே புதிய தார் சாலை?
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் தாக்கல் செய்த மனுவில், மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றியுள்ள மாசி வீதிகள் உள்ளிட்ட மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெறும் சாலைப் புதுப்பிப்புப் பணிகளில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
ஏற்கெனவே உள்ள பழைய தார் சாலைகளை முறையாகத் தோண்டி அகற்றாமல், சாலையோர ஆக்கிரமிப்புகளையும் அகற்றாமல், பழைய சாலையின் அகலத்தைக் குறைத்து புதிய சாலை அமைக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சாலைகளின் உயரம் அதிகரித்து, சாலையோரங்களில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் பள்ளமான நிலைக்குத் தள்ளப்படுகின்றன. மழைக்காலங்களில் மழைநீர் வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
சாலைப் பணிகளின் தரம், அகலம், தடிமன், உயரம் ஆகியவற்றை ஆய்வு செய்து, விதிமீறல்கள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களின் நிலுவைத் தொகை மற்றும் இறுதிப் பணப்பட்டுவாடாவை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், தவறு செய்த ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
அதிகாரிகளுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி
இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தற்போது சாலைகள் முறையாக அமைக்கப்படுவதில்லை என்றும், ஏற்கெனவே போடப்பட்ட சாலையின் மீதே தாரை ஊற்றி பூசிவிட்டு, புதிய சாலை அமைத்ததாகக் கணக்குக் காட்டுவதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
ஏற்கெனவே உள்ள சாலையைத் தோண்டி அகற்றிய பின்னரே புதிய சாலை அமைக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், அந்த விதிகள் முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதேபோன்று சாலைகள் அமைக்கப்பட்டால் எதிர்காலத்தில் மதுரையை அடையாளம் காண முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஏற்கெனவே உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு விதிகள் இருந்தும் அவை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவுகளுக்கு மட்டுமல்லாமல் தலைமைச் செயலாளரின் உத்தரவுகளுக்குக்கூட அதிகாரிகள் மரியாதை அளிப்பதில்லையா எனக் கேள்வி எழுப்பினர்.
முக்கியப் பிரமுகர்கள் வரும்போதுதான் சாலைகள் சீரமைக்கப்படுகிறதா?
முதல்வர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் மதுரைக்கு வரும்போது மட்டும் இரவோடு இரவாகச் சாலைகள் அமைக்கப்படுவதாக நீதிபதிகள் விமர்சித்தனர்.
பொதுமக்களுக்கு நல்ல சாலைகள் கிடைக்க வேண்டும் என்றால், ஒவ்வொரு வாரமும் முதல்வரோ, பிரதமரோ மதுரைக்கு வர வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பினர்.
உயர் நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்புப் பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள்கூட சில நாட்களிலேயே சேதமடைந்து காணாமல் போய்விடுவதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், சாலை அமைக்கும் பணிகளின் தரம் குறித்தும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும், அரசு ஒப்பந்தப் பணிகளில் அதிக கமிஷன் பெறக்கூடிய பணியாகச் சாலை அமைக்கும் பணிகள் இருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர்.
மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் நேரில் ஆஜராக உத்தரவு
இதையடுத்து, மதுரை மாநகராட்சியில் சாலை அமைக்கும் ஒப்பந்தத்தைப் பெற்ற ஒப்பந்ததாரர், அந்தப் பணிகளைக் கண்காணித்த அலுவலர், மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், சாலை அமைப்பதற்காக எவ்வளவு தொகைக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது, எந்தத் தொகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது உள்ளிட்ட விவரங்களையும், அதற்கான அனைத்து ஆவணங்களையும் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
