ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு, சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் வர்தமான் ஜெயின் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் சுமார் ரூ.208 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியுள்ளனர். திருமலை திருப்பதி தேவஸ்தான வரலாற்றில், தனிநபர் ஒருவர் வழங்கிய மிகப்பெரிய நன்கொடையாக இது கருதப்படுகிறது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில், இந்தத் தங்க ஆபரணத் தொகுப்பு திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் கிரீடம், ஒட்டியாணம், புஜகீர்த்திகள், சங்கு, சக்கரம், அபய ஹஸ்தங்கள் உள்ளிட்ட 46 வகையான ஆபரணங்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்;
வர்தமான் ஜெயின், சென்னை லயோலா கல்லூரியில் புள்ளியியல் படித்தவர். பின்னர் அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1997-ம் ஆண்டு தொழில்முனைவோர் பயணத்தைத் தொடங்கிய இவர், டெல் நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பு வகித்துள்ளார்.
அதன்பிறகு, சர்வதேச சுகாதாரத் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்’ மற்றும் ஆசியா சென்னை இன்ஜினியரிங் உள்ளிட்ட நிறுவனங்களை நிறுவினார்.
கடந்த 2025-ம் ஆண்டு, ‘ஆக்சஸ் ஹெல்த்கேர்’ நிறுவனத்தின் பங்குகளை சுமார் ரூ.18,524 கோடிக்கு விற்பனை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடரும் அறப்பணிகள்:
தொழில் துறையில் சாதனை படைத்துள்ள வர்தமான் ஜெயின், சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். ‘ஸ்ரீ சரிதா ஜெயின் அறக்கட்டளை’ மூலம் கல்வி உதவிகள், பசிப்பிணி போக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
சென்னை காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை மூலமாகவும் மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறார்.
ஏற்கெனவே திருப்பதி தேவஸ்தானத்தின் வெங்கடேஸ்வரா பக்தி சேனலுக்கு ரூ.7 கோடி, கோசாலையில் கால்நடைகளுக்கான தீவனம் கலக்கும் ஆலை அமைக்க ரூ.5 கோடி, நாணயங்களை எண்ணும் இயந்திரம் வாங்க ரூ.1 கோடி ஆகியவற்றை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும், மின்சாரப் பேருந்துகளையும் காணிக்கையாக அளித்துள்ளார்.
தற்போது ரூ.208 கோடி மதிப்பிலான 121 கிலோ தங்க ஆபரணங்களைக் காணிக்கையாக வழங்கியிருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
