மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கு: கைதான எம்.எல்.ஏ. அருள் விக்னேஷுக்கு உயர் பாதுகாப்பு அறை ஒதுக்கீடு!
மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு, கடலூர் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு அறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கடலூர் மத்திய சிறையில் மொத்தம் 16 உயர் பாதுகாப்பு அறைகள் உள்ளன. இவை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷுக்கு தனி அறையான எண் 4 ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அறைக்குள் வேறு கைதிகள் யாரும் செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கியுள்ள அறைக்கு முன்பாக வராண்டா மற்றும் சிறிய இடம் அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து இரும்புக் கம்பிகளால் ஆன கதவு அமைக்கப்பட்டுள்ளது.
அறைக்குள் கட்டில், மெத்தை, நாற்காலி உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும், சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவிலிருந்து மாறுபட்டு, ஏ-கிளாஸ் கைதிகளுக்கான உணவு வழங்கப்படுகிறது. அதன்படி, தினமும் கூடுதல் அளவில் பால் மற்றும் சப்பாத்தி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
மேலும், மற்ற கைதிகளுடன் அவர் பேசுவதற்கும் அனுமதி இல்லை. அறைக்கு முன்பாக 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
