Homeசெய்திகள்தமிழ்நாடுதிருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் மீது கடும் விமர்சனம் – ஹரி பரந்தாமன், வாஞ்சிநாதன் கருத்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் மீது கடும் விமர்சனம் – ஹரி பரந்தாமன், வாஞ்சிநாதன் கருத்து!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் விவகாரம்: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன் வலியுறுத்தல்!திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபதிகள் மீது கடும் விமர்சனம் – ஹரி பரந்தாமன், வாஞ்சிநாதன் கருத்து!

திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து குடியரசுத் தலைவரைச் சந்திக்க வேண்டும் என்றும் முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையை ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த விவகாரம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விளைவுகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன் ஆகியோர் சென்னையில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

இந்த அமர்வை மாற்றியமைக்க வேண்டும் என்றும், தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு தனது எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வை மாற்றியமைக்கக் கோரி, முதலமைச்சர் விஜய் தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தீர்ப்பை பிரதமர் மோடி வரவேற்றது கண்டிக்கத்தக்கது என்றார். காவிரி பிரச்சினை மற்றும் பெண்கள் சபரிமலைக்குச் செல்வது தொடர்பான வழக்குகளில் இதுபோன்ற விரைவான தீர்ப்புகள் வழங்கப்படவில்லை என்றும் ஹரி பரந்தாமன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன், காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையின்படி உச்சிப்பிள்ளையார் கோவில் தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வந்ததாகக் குறிப்பிட்டார். இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வழங்கியுள்ள தீர்ப்பு முரண்பாடானது என்றும், ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் மத நல்லிணக்கத்துக்கும் எதிரானது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இந்தத் தீர்ப்பால் கோவிலின் பாரம்பரிய நடைமுறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக மாநில அரசு அரசியலமைப்புச் சட்ட நெருக்கடியைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலை மற்றும் தீபத்தூண் பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் உச்ச நீதிமன்றத்தை அதன் நீதிபதிகளே அவமதித்துள்ளதாக வாஞ்சிநாதன் விமர்சித்தார்.

இந்தத் தீர்ப்பை நீதிபதிகள் ஆத்திரத்திலும் அவசரத்திலும் வழங்கிய தீர்ப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது என்றும் அவர் கூறினார். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்க 30 ஆண்டுகள் எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மட்டும் ஏன் மூன்று நாட்களில் முடிவெடுத்தது என்றும் கேள்வி எழுப்பினார்.

அறங்காவலர் குழுவிடம் கருத்துக் கேட்காமலேயே திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவை உச்ச நீதிமன்றம் இடைநீக்கம் செய்ததுடன், கோவில் நிர்வாகத்தைக் கவனிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை இணைக் காவலர்களாக நியமித்திருப்பதற்கும் அவர் கடும் கண்டனம் தெரிவித்தார்.

ஒட்டுமொத்தமாக இந்தத் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்துக்கும் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானது எனக் கருத்துத் தெரிவித்த வாஞ்சிநாதன், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தமிழ்நாட்டின் மீது வன்மம் கொண்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து, திருப்பரங்குன்றம் விவகாரம் மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகத் தங்களது எதிர்ப்பையும் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழக அரசு உடனடியாகச் சட்டப்பேரவையைக் கூட்டி, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வாஞ்சிநாதன் வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து தமிழக அரசு நல்ல முடிவெடுக்க வேண்டும் – ஜி.கே. வாசன் பேட்டி!

MUST READ