மகேஷ் பாபுவின் வாரணாசி படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
மகேஷ் பாபுவின் 29-வது படமான ‘வாரணாசி’ திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ராஜமௌலி இயக்கும் இப்படத்தில், மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏற்கனவே இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது விஎஃப்எக்ஸ் உள்ளிட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில், இப்படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியதோடு, 2027 ஏப்ரல் 7-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால், சமீப காலமாக இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனவும், 2027 ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் திரையிடப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்தத் தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இது தவிர, இந்த படத்தில் நடிகர் மகேஷ் பாபு, ராமராக தோன்றுவார் எனவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இது குறித்த கூடுதல் தகவல் கசிந்துள்ளது. அதன்படி, ‘வாரணாசி’ படத்தில் இடம்பெறும் மகேஷ் பாபுவின் 25 நிமிட ராமர் எபிசோடு, ருத்ராவின் நவீன கால டைம்-டிராவல் கதையுடன் நேரடியாகத் தொடர்புடையதாக இருக்கும் என்ற புதிய தகவல் கசிந்துள்ளது.
உலகம் சுற்றும் சாகசம், டைம்-டிராவல் மற்றும் ராமாயணப் போர் ஆகியவற்றை ஒன்றாக இணைப்பது திரைக்கதையை அதிக சிக்கலானதாக மாற்றிவிடும் அபாயம் இருப்பதாகப் பேசப்படுகிறது. மேலும், விஎஃப்எக்ஸ் தாமதங்களால் 2027 ஏப்ரல் ரிலீஸ் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், முன்கூட்டியே கசியும் இதுபோன்ற கதைத் தகவல்கள் உண்மையான அப்டேட்டுகளா? அல்லது போஸ்ட் புரொடக்ஷன் சிக்கல்களிலிருந்து கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
