தொகுதி மறுசீரமைப்பு மசோதா விவகாரம் தேசிய மற்றும் தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள பதில் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
மாநில உரிமைகள் மற்றும் தமிழ் மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் திமுக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்பதை அவர் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு ஸ்டாலின் நன்றி!
அரசியலமைப்புச் சட்டத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுப் பங்களிப்பை அங்கீகரித்துக் கருத்துத் தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் விரிவான பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “அரசியலமைப்புச் சட்டத்தையும், மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுப் பங்கை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்திக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்நாடு மற்றும் தமிழ் மக்களின் நலனை முதன்மை நோக்கமாகக் கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம்.
இந்தப் பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். வரலாறு எங்களை ‘எட்டப்பர்களாக’ அல்லாமல் ‘கட்டபொம்மன்களாகவே’ கணிக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டபொம்மன் – எட்டப்பன் ஒப்பீட்டின் பின்னணி!
தமிழக வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகப் போராடியவராகவும், எட்டப்பன் துரோகத்தின் அடையாளமாகவும் பொதுவெளியில் குறிப்பிடப்படுகின்றனர்.
இந்த வரலாற்று ஒப்பீட்டைப் பயன்படுத்தியுள்ள ஸ்டாலின், தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான விவகாரங்களில் திமுகவின் நிலைப்பாடு உறுதியானது என்பதை வலியுறுத்தியுள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் அரசியல் விவாதம்!
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடரில் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான மசோதாக்கள் விவாதத்திற்கு வரவுள்ள சூழலில், திமுகவின் நிலைப்பாடு குறித்து அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
குறிப்பாக, தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டின் மக்களவைப் பிரதிநிதித்துவப் பங்கு குறையக்கூடாது என்றும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் திமுக வலியுறுத்தி வருகிறது. இந்தச் சூழலில், “வரலாறு எங்களைக் கட்டபொம்மன்களாகவே கணிக்கும்” என்ற ஸ்டாலினின் கருத்து அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதங்கள் மற்றும் வாக்கெடுப்பு, தேசிய அரசியலிலும் தமிழக அரசியலிலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
