அவினாசிபாளையம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து – சிறுமி பலி
திருச்சி நவலூர் குட்டப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் ஒரு காரில் இன்று அதிகாலை திருச்சியில் இருந்து கோவை ஈஷா யோகா மையத்திற்கு புறப்பட்டார்.

திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையம் பல்லடம் ரோட்டில் செல்லும்போது திடீரென்று நிலைதடுமாறிய கார் தாறுமாறாக ஓடி ரோட்டின் ஓரத்திலிருந்த புளிய மரத்தில் பயங்கர அதிவேகத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது.

காரில் இருந்த ராஜேந்திரன் மற்றும் அவரது மகள் கிருத்திகா (11) உள்ளிட்ட 8 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமி கிருத்திகா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து உடனடியாக அவினாசிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்து சென்று காயமடைந்த 7 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தில் கார் மோதி சிறுமி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


