கிண்டி மருத்துவமனை ஜூன் 15-ல் திறப்பு
கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை ஜூன் 15ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டையொட்டி, கிண்டியில் 230 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட உள்ளது. இதனைத் திறந்து வைத்திட வருமாறு ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இதையடுத்து ஜூன் 5-ம் தேதி கலைஞர் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கப்பட இருந்தது. ஆனால் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்டதால், திறப்பு விழாவில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திறப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை. ஜூன் 15ம் தேதி கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு என அரசு அறிவித்துள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே திறந்து வைக்க உள்ளார். வெளிநாட்டு பயணங்களை முடித்துக் கொண்டு ஜூன் 10 ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு நாடு திரும்பினார். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு இந்த வாரம் தமிழ்நாடு வரும் திட்டம் ஏதுமில்லை. குடியரசுத் தலைவர் இந்த வாரம் தெலங்கானா செல்வது மட்டுமே இறுதியாகியுள்ளது.