செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் இருக்கிறாரே தவிர அவர் குற்றவாளி அல்ல- அப்பாவு
அரசியல்வாதி போல் செயல்படும் அந்த போக்கை ஆளுநர் மாற்றிக்கொள்ள வேண்டும் என தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா பாளையங்கோட்டையில் உள்ள நேருஜி கலையரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “நீதிமன்ற காவலில் இருக்கிறாரே தவிர அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றவாளியல்ல. முதல்வர் பரிந்துரையின் பேரில் அவரை பதவி நீக்கம் செய்யலாம் அல்லது அவரே ராஜினாமா செய்யலாம் அதனை தாண்டி அவரை நீக்கம் செய்ய முடியாது. 2010-ல் அமித்ஷா குஜராத்தில் அமைச்சராக இருக்கும் போது போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டு 3 மாதம் சிறையில் இருந்தபோது அவர் இலாகா இல்லாத அமைச்சராக இருந்தார். அவர்களுக்கு மட்டும் ஒரு நியாயமா?. எடுத்தோம் கவிழ்தோம் என ஆளுநர் செயல்படுகிறார்.
இந்தியா மதசார்பற்ற நாடு மதசார்பின்றி நடப்பேன் என சொல்லுவிட்டு மதசார்போடு ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் பாண்டிச்சேரியில் ஆரோவில் ஃபவுண்டேசனில் பதவியில் இருந்துகொண்டு ஊதியம் வாங்குவதாக கூறப்படுகிறது. அந்த தகவல் இணையதளத்திலும் உள்ளது. ஆளுநராக இருக்கும் ஒருவர் வேறு ஒரு இடத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு செயல்படக்கூடாது. இது தொடர்பாக ஒரு உறுப்பினரும் சட்டப்பேரவையில் கேள்வியும் எழுப்பி உள்ளார். அதற்கு இதுவரை ஆளுநர் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. ஆளுநர் அரசியல்வாதிப்போல் செயல்பட்டுவருகிறார். அந்தபோக்கை மாற்றிகொள்ளவேண்டும்” என தெரிவித்தார்.