spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதன்னைப் பற்றி எழும் விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டேன்: நயன்தாரா

தன்னைப் பற்றி எழும் விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டேன்: நயன்தாரா

-

- Advertisement -

மாயா, கேம் ஓவர் படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள ‘கனெக்ட்’ திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. ‘கனெக்ட்’ பட ப்ரோமோசனுக்காக நயன்தாரா பேட்டி அளித்திருந்தார்.

அப்போது பேசிய நயன்தாரா, “ இந்த 20 வருட திரைப்பயணத்தில் எல்லாமே நன்றாக அமைந்தது. முதல் 10 வருடங்களை கடந்த பின்பு தனக்கென்று ஒரு சில கனவுகள் இருந்தன. அந்த நேரத்தில் பெண்ணை முன்னணி கதாபத்திரமாக வைத்து படங்கள் எதுவும் உருவாகவில்லை. பெண்களுக்கு முக்கியத்துவம் இல்லாத ஒரு காலமாக அப்போது இருந்தது.

we-r-hiring

ஏன் நடிகைகளுக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருக்கிறது என்றெல்லாம் தனக்கு கேள்வி எழுந்தது. இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றால் கூட ஏதாவது ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள் என்ற சூழல்தான் இருந்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் தருமாறு ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது உண்டு. ஆனால் இப்பொழுது நிறைய படங்கள் பெண்ணை முக்கிய கதாபாத்திரத்தில் வைத்து உருவாகி வருகின்றன.

இப்போது இருக்கும் மாற்றம் ஒரு பெரிய மாற்றமாகத்தான் கருதுகிறேன். 15 படங்கள் ஹீரோக்களை வைத்து உருவாகிறது என்றால் அதே சமயத்தில் 5 படங்கள் கதாநாயகியை முக்கிய கதாபாத்திராமக வைத்து உருவாகின்றன.

அப்போது எல்லாம் பெண்ணை மையப்படுத்தி ஒரு கதையை உருவாக்க தயாரிப்பாளர்கள் கூட யாரும் இல்லை. ஆனால் இப்போது பெண்ணை மையப்படுத்தி உருவாகிற படங்கள் அனைத்துமே ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் உள்ளேயே அடங்குகிறது. அந்த பட்ஜெட்டை மீறி போகக்கூடாது என்று உள்ளது. ஒரு மிகப்பெரிய பட்ஜெட்டில் ஏன் ஒரு படம் பண்ண கூடாது என்ற ஆசை உள்ளது. அதற்காக முயற்சி செய்து வருகிறேன். ஹீரோக்களின் படங்கள் கோடிக்கணக்கில் வசூல் செய்யும் போது பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஹீரோயின் படங்களும் தயாரிப்பாளர்களுக்கு நல்ல வசூலை ஈட்டி தரும்.

பில்லா திரைப்படத்தில் நடிக்கும் போது அந்த கதாபாத்திரத்திற்காக இயக்குநர் விஷ்ணுவை தவிர யாரும் தனக்கு நம்பிக்கை தரவில்லை. தோழியும் விஷ்ணுவின் மனைவியுமான அணு, நயன்தாராவால் இது செய்ய முடியும் என்று உறுதியாக நம்பினார். இதுவும் ஒருவிதமான அனுபவம் தான். பில்லா, யாரடி நீ மோகினி 2 திரைப்படங்களுமே ஒரே நேரத்தில் படமாக்கப்பபட்டதுதான். 15 நாட்கள் பில்லா திரைப்படத்திலும், அடுத்த 15 நாட்கள் யாரடி நீ மோகினி படத்திலும் நடித்துள்ளேன்.

பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை தன்னால் பண்ண முடியாது என்று யாராவது கூறினால், அது தனக்குள் உறுத்திக் கொண்டே இருக்கும். அதை பண்ண முடியுமே, செய்து காட்டுகிறேன் என ஒரு நம்பிக்கை உள்ளது. அப்போது என்று இல்லாமல் தற்போது வரை விமர்சனம் தன்மீது வைக்கப்பட்டு தான் வருகிறது. எடை கூடினால் எடை கூடி விட்டது என்கிறார்கள். எடையை குறைத்தால் என்ன ஒல்லியாகி விட்டீர்கள் என்கிறார்கள்.

தன்னை ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றால், தன்னை பற்றி எழுதத்தான் செய்வார்கள். அது தனது மூளைக்கும் மனதுக்கும் போகாது. காதில் விழும். ஆனால் அதை கண்டு கொள்ள மாட்டேன். நான் என்ன நினைப்பேன் என்றால் என்னைப் பற்றி எழுதுவது அவர்களுக்கு நிறைய நேரம் உள்ளது போல எனக்கு நேரமில்லை என நினைத்துக் கொள்வேன்.

திருமணமான பெண்களுக்கு கட்டுப்பாடுகள் அவர்களுக்கு வருவதற்கான காரணம் என்ன என்று புரியவில்லை. இது சரி இல்லை என்று தான் தோன்றுகிறது. திருமணத்துக்கு பின் பெண் வேலைக்கு போகக்கூடாதா? தன் வாழ்வில் திருமணத்திற்கு பின் எதுவும் மாறவில்லை. வீட்டிலும் எதுவும் மாறவில்லை. தனது மனநிலையும் மாறவில்லை. எல்லாருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.

காதல் என்பது தன் கணவர்தான் (விக்னேஷ் சிவன்). காதல் என்றால் என்னவென்று நினைக்கிறேனோ அது எல்லாமே அவர்தான். எப்போது இருந்து அவரை காதலிக்க ஆரம்பித்தேனோ அப்போது இருந்தே காதலுக்கான விளக்கமே அவர்தான். இனிமேல் எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை, யார் என்ன சொன்னாலும் எந்த சூழ்நிலை இருந்தாலும், இவர்கூட இருந்தால் எல்லாமே சரியாக அமையும், இவர் பார்த்துக் கொள்வார் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது.

பேய் பயம் என்பது ரொம்ப இல்லை என்றாலும் சற்று பயப்படுவேன். தனியாக இருந்தால் ரொம்ப பயப்படுவேன். ஆனால் தனியாக உட்கார்ந்து பேய் படங்கள் பார்க்க பிடிக்கும். அது ஒரு த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கும். நிறைய படங்கள் அவ்வாறு தனியாக பார்த்துள்ளேன். அப்படி பார்ப்பதால்தான் என்னவோ அமானுஷ்யமான நிகழ்வுகள் நடைபெறுவதாக தோன்றும். பயமில்லை என்றாலும் கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்கிறது.

கனெக்ட் படத்தில் 50 வயது அம்மாவாக நடித்துள்ளேன். இந்த படம் முழுவதுமே கொரோனா ஊரடங்கு காலத்தில் நடைபெறும் கதையாக அமைந்துள்ளது. நடிக்கும் அனைத்து படங்களுமே ரசிகர்களுக்காகத்தான். சமூக வலைதளத்தில் தான் இல்லை என்பது ரசிகர்களுக்கு தெரியும். அதனால் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி, அவர்களுக்கு அதற்கு பதில் வராது என்று தெரியும். அப்படி இருந்தும் உங்களை வாழ்த்துகிறோம், ஆதரவாக இருப்போம் என்று ரசிகர்கள் அமைந்தது தன்னுடைய வரம்தான்.

சமூக வலைதளத்தில் இல்லாததால் ரசிகர்களுடைய வாழ்த்துக்கு பதில் அளித்திருக்க முடியாது. ஆனால் இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்ன நடந்தாலும் ஆதரவாக எப்போதும் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறினார்.

MUST READ