செந்தில் பாலாஜியை டிஸ்மிஸ் செய்யும் உத்தரவு நிறுத்திவைப்பு!
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக எழுதிய கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது.

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக, ஆளுநர் ரவி உத்தரவிட்டதாக நேற்று இரவு 7 மணியளவில் செய்தி வெளியானது.ஆளுநரின் உத்தரவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். இதனிடையே, நள்ளிரவு 12 மணியளவில் ஆளுநரின் நீக்க உத்தரவு நிறுத்தி வைக்கப்படுவதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், அட்டார்னி ஜெனரல் கருத்தை கேட்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, ஆளுநர் கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக எழுதிய கடிதத்தை நிறுத்தி வைப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியானது. அதில், “மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர் செந்தில் பாலாஜி நீக்கம் குறித்து உரிய சட்ட ஆலோசனை பெற உள்ளதால், நீக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் கருத்து கேட்க, உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரை நீக்குவதாக ஆளுநர் பிறப்பித்த உத்தரவு 5 மணி நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.