நடிகர் விஜயகுமார் உடல்நிலை குறித்து தவறான தகவல் பரவிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாக அவரே ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள நாட்டுச்சாலை என்ற சிற்றூரில் பிறந்தவர் நடிகர் விஜயகுமார். சுமார் 400 திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு அருண்விஜய், கவிதா, அனிதா, வனிதா, பிரிதா, ஸ்ரீதேவி ஆகிய குழந்தைகள் உள்ளனர். சின்னத்திரையில் இவர் ‘தங்கம்’ தொடரில் ரம்யா கிருஷ்ணனுக்கு தந்தையாக நடித்துள்ளார். இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் துணைத்தலைவர் பதவியை வகித்தவர். 1961 ஆம் ஆண்டில் ஸ்ரீ வள்ளி திரைப்படத்தில் குழந்தை நடிகராக நடித்து தனது திரையுலக பயணத்தை தொடங்கிய விஜயகுமார், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடனும் நடித்துள்ளார்.

இவரது மூத்தமகன் அருண்விஜயும், இவரும் இணைந்து பாண்டவர் பூமி , மலாய் மலாய் , மஞ்சா வேலு, குற்றம் 23 மற்றும் ஓ மை டாக் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் அருண் விஜயின் தந்தையும் நடிகருமான விஜயகுமார் படப்பிடிப்பு தளத்தில் மறைந்து விட்டதாக வதந்திகள் பரவியது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் பகிர்ந்து வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
இதேபோல் தான் நலமுடன் உள்ளதாகவும், வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் விஜயகுமார் தெரிவித்துள்ளார்