மறைந்த நடிகர் மாரிமுத்து, தன்னுடைய கண்ணீர் அஞ்சலி பேனர் முன்னரே செல்ஃபி எடுத்துள்ள படப்பிடிப்பு தள புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் எத்தனை கலைஞர்கள் வந்தாலும் போனாலும் ஒரு சிலரே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கமுடியும். அப்படி தற்போது சீரியல் மூலமாக தமிழக மக்கள் மனதில் பரவலாக இடம் பெற்றிருப்பவர் மாரிமுத்து.


எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் ஆண், பெண் உட்பட அனைவரது மனங்களையும் கவர்ந்து விட்டார் மாரிமுத்து. தற்போது சீரியல் என்றாலே மாரிமுத்து தான் தமிழக மக்களுக்கு நினைவு வரும்.
அந்தளவுக்கு புகழை பெற்று முன்னேறி வந்து கொண்டிருக்கும் நேரத்தில் பேரிடியாக அவர் இறந்த செய்தி இன்று காலை வந்தது. மாரடைப்பு காரணமாக அவர் உயிர் இழந்துள்ளார். இந்த செய்தியை தமிழ் ரசிகர்கள் யாராலும் ஜீரணிக்கவே முடியவில்லை. தங்களுக்கு நெருங்கிய ஒருவர் மறைந்து விட்டதாகவே தங்களது மன வருத்தத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மாரிமுத்து ‘விழா நாயகன்’ என்ற படத்தில் நடித்து வந்த போது தன்னுடைய கண்ணீர் அஞ்சலி பேனர் முன்னாடி அவர் செல்பி எடுத்துள்ள படப்பிடிப்பு தள புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஒரு நடிகனுக்கு மட்டுமே இப்படி நடப்பது வாழ்நாளில் சாத்தியம் என்றும் பலர் கண்ணீர் மல்க கருத்து தெரிவித்து வருகின்றனர்.


