வேளச்சேரி சென்னை சில்க்ஸ் கடையின் அருகில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து
சென்னை வேளச்சேரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தில் உள் அலங்கார பணியில் ஈடுபட்டிருந்த போது தீடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை வேளச்சேரி பிரதான சாலை, கைவேலி மேம்பாலம் அருகில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் புதியதாக கட்டப்பட்டு வந்த 9 மாடி கட்டிடத்தில், உள் அலங்கார பணி இன்று நடைபெற்று வந்தது. மாலை தீடீரென மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட நபர்கள் வேலை பார்த்து வந்த நிலையில் தீப்பற்றி அதிக புகை வெளியான நிலையில் கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு அனைவரும் வெளியேறினர்.
உடனடியாக அருகில் உள்ள துணிக்கடையில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்த ஊழியர்கள் முயன்றனர். இருப்பினும் அதிகளவில் கரும்புகை வேளச்சேரி பகுதி முழுவதும் பரவி புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, வேளச்சேரி, கிண்டி, திருவான்மியூர், மேடவாக்கம், அசோக் நகர், துரைப்பாக்கம், உள்ளிட்ட 6 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். உயரமான கட்டிடம் என்பதால் ஸ்கைலிப்ட் வாகனம் வரவழைக்கப்பட்டு கட்டிடம் முழுவதும் ஏறி தீயை கண்காணித்து அணைத்தனர்.

வேளச்சேரி காவல் ஆய்வாளர் விமல் தலைமையில் காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்தனர். ஆம்புலன்ஸ் பாதுகாப்பிற்காக வரவழைக்கப்பட்டது.நிகழ்விடத்திற்கு அடையார் துணை ஆணையர் பொன் கார்த்திக் குமார் நேரில் வந்து பார்வையிட்டார். ரயில் நிலையம் செல்லும் பாதை தடை செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டில் எடுத்தனர். இதனால் வாகன ஓட்டிகள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த கட்டிடம் உணவகத்திற்காக கட்டப்படுவதாக கூறப்படுகிறது.இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. தீயை அணைத்த பிறகு செய்தியாளரிடம் பேசிய தீயணைப்பு துறை இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன்,தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் இந்த விபத்தால் யாருக்கும் எந்த வித உயிர் சேதம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.