காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்த மற்றொரு பெண் உயிரிழப்பு
திருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் இன்று உயிரிழந்துள்ளார்.

தமிழம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வரக்கூடிய நிலையில், அதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுவருகிறது. காய்ச்சலுக்காக மருத்துவமனை வருவோருக்கு உரிய சிகிச்சை மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் ரத்த பரிசோதனை மேற்கொண்டு அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் தனி வார்டு பகுதியில் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கொசுவலை கொடுக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க இங்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் திருச்சியில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த கனகவல்லி என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். திருவானைக்காவலை சேர்ந்த அவர், சில தினங்களுக்கு முன் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கு டெங்கு அறிகுறி இல்லை என்று மருத்துவமனை கூறினாலும், அப்பகுதி மக்கள் அரசு தரப்பு டெங்கு மரணத்தை மறைப்பதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


