மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு மங்காபுரம், பகுதியை சேர்ந்தவர் வேலு வயது:52, இவரது மனைவி நிர்மலா தேவி வயது:40. இவர்களுக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த தனசேகரன் வயது:35 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, அந்த தம்பதியர் இந்திய விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக தனசேகரனுக்கு ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
இதனை நம்பி ஆசைபட்ட, தனசேகரன் லட்ச கணக்கில் பணத்தை தந்துள்ளார். ஆனால், வேலை வாங்கித் தராமல் வேலு தொடர்ந்து இழுக்கடித்துள்ளார் .
அப்போது தான் தனசேகரன் ஏமாற்றப்பட்டதை அறிந்தார். உடனடியாக, ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் செய்தார். காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் புகாரை ஆவடி மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றி, புகார் குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
”வேலைவாய்ப்பு மோசடி தடுப்பு பிரிவு” ஆய்வாளர் கீதா தலைமையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வேலுவை தனிப்படை அமைத்து தேடினர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வேலுவை போலீஸார் வேலூரில் வைத்து கைது செய்து ஆவடி ஆணையரகம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில், தனசேகர் உட்பட பலரிடம் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை ஏமாற்றியது தெரிய வந்தது.
பின்னர், போலீஸார் வேலு மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள அவரது மனைவி நிர்மலா தேவியை போலீசார் தேடி வருகின்றனர்.
இளைஞர்களின் கனவை சாதகமாக பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்து சிறையில் அடைத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாரை ஆவடி காவல் ஆணையர் வெகுவாக பாராட்டியுள்ளார்.