பிரபல நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான அதாகப்பட்டது மகாஜனங்களை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். சமீபத்தில் தம்பி ராமையா, சமுத்திரக்கனி கூட்டணியில் ராஜகிளி எனும் திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்ற அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
இதைத் தொடர்ந்து, பித்தல மாத்தி எனும் திரைப்படத்தில் உமாபதி ராமையா நடித்துள்ளார். இந்த படத்தில் இவருடன் இணைந்து சம்ஸ்கிருதி,பால சரவணன், தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், வித்யுலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இதில் தம்பி ராமையாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், உமாபதி ராமையாவுக்கும், நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது. இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் இரு வீட்டார் முன்னிலையில் சென்னையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். தமிழில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் ஐஸ்வர்யா அர்ஜூன் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.