மதுரை வீரகனூரில் வசித்து வந்த வடிவேலின் தாயார் சரோஜினி (87) உடல் நலக்குறைவால் காலமானார். இதையடுத்து நடிகர் வடிவேலுக்கு பல்வேறு திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.


இந்நிலையில் நடிகர் வடிவேலு தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “நடிகர் வடிவேலு அவர்களின் அன்புத்தாயார் திருமதி. சரோஜினி அம்மாள் என்கிற பாப்பா அவர்கள் மதுரை விரகனூரில் உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
ஆளாக்கி அழகு பார்த்த அன்னையின் மறைவு என்பது எந்த ஒரு மகனுக்கும் ஈடுசெய்ய இயலாதஇழப்பாகும். ‘வைகைப் புயல்’ திரு. வடிவேலு அவர்களுக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
