ரூ. 2000 ரூபாய் வரை விற்கப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது 8500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த அதிரடி விலை உயர்வுக்கு காரணம் உண்மையிலேயே எரிபொருள் தட்டுப்பாடா அல்லது பதுக்கப்படுகிறதா.? என தமிழ்நாடு ஐடி விடுதி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் நல சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.


வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு தட்டுப்பாட்டால் தங்கும் விடுதிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்கள் , மற்றும் பணி புரியும் ஆடவர்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாவதாக தமிழ்நாடு ஐடி விடுதி மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் நலச் சங்கம் தலைவர் சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.
அப்போது சங்கத்தின் தலைவர் சீதாராம் கூறுகையில், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாடு முழுவதும் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விநியோகத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளன என தெரிவிக்கப்பட்டாலும், ஒன்றிய எரிபொருள் அமைச்சகம் மாநிலங்களுக்கு 70 சதவீத எரிவாயு விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியிருப்பது சந்தேகங்களை எழுப்புவதாக தெரிவித்தார். உண்மையில் தட்டுப்பாடா அல்லது எங்காவது பதுக்கப்படுகிறதா என்ற கேள்வியையும் அவர் முன்வைத்தார்.
முன்னதாக ரூ.2000 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக சிலிண்டர், தற்போது ரூ.8500 வரை விற்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த விலை உயர்வு விடுதிகள் மற்றும் உணவகங்களின் இயங்குதிறனை கடுமையாக பாதித்துள்ளதாகவும், குறிப்பாக விடுதிகளில் தங்கி உள்ள மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் அன்றாட உணவு வசதிகளில் சிரமம் அனுபவித்து வருவதாகவும் கூறினார்.
தமிழ்நாட்டில் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகளில் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கி வருவதாகவும், இந்த தட்டுப்பாடு அவர்களின் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், இந்த துறையில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருவதால், அவர்களின் வாழ்வாதாரமும் ஆபத்தில் உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.
எரிவாயு கிடைக்காத சூழலில், பல இடங்களில் மாற்று வழியாக விறகடுப்பு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், கடும் வெயில் காலத்தில் இது சமையல் பணியாளர்களுக்கு உடல் நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சமீபத்தில் கடன் சுமை காரணமாக ஒரு விடுதி உரிமையாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், ஹோட்டல்களுக்கு மின்சார கட்டணத்தில் வழங்கப்பட்ட சலுகையைப் போலவே விடுதிகளுக்கும் யூனிட்டுக்கு ரூ.2 வரை மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும், வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய வெடிமருந்துக் கிடங்கின் மீது தாக்குதல்!!
