உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா நேற்று (ஜனவரி 22) நடைபெற்றது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவை இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன் நின்று நடத்தி வைத்தார். அயோத்தி முழுவதும் விழா கோலம் பூண்டது. ஸ்ரீ ராமருக்கு பூஜைகளும் நடத்தப்பட்டது. திட்டமிட்டபடி அயோத்தி ராமர் கோயில் கருவறையில் குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இந்த விழாவில் லட்சக்கணக்கான கலந்து கொண்டனர். கிட்டத்தட்ட 7000 விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த வகையில் முகேஷ் அம்பானி, சச்சின் டெண்டுல்கர், விராத் கோலி, ரஜினி, அமிதாப்பச்சன், சிரஞ்சீவி, கங்கனா ரனாவத், கத்ரீனா கைஃப் உள்ளிட்ட பலரும் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இவ்விழா குறித்து நேற்று சென்னை நாரதகான சபாவில் கலந்து கொண்ட இளையராஜா, சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ராமர் கோயில் பற்றி பேசும்பொழுது கண்களில் கண்ணீர் வருகிறது. அயோத்தியில் இன்று நான் இல்லாதது வருத்தமாக இருக்கிறது. ராமர் பிறந்த இடத்திலேயே ராமருக்கு கோயில் கட்டப்பட்டதற்காக பிரதமர் மோடியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டி புகழலாம். முன்னொரு காலத்தில் மன்னர்கள் தான் கோயில்களை கட்டுவார்கள் ஆனால் தற்போது பிரதமர் மோடி கோயிலை கட்டியிருக்கிறார் யாருக்கும் கிடைக்காத இந்த பாக்கியம் யாரால் முடியும். இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போனார்கள் ஆனால் நரேந்திர மோடி அவர்கள் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளார். அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும்” என்று மோடியை பாராட்டி பேசியுள்ளார்.