பிரபல இசையமைப்பாளரின் இசை கச்சேரியை முன்னிட்டு சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம் தயாராகி வருகிறது.
தமிழ் திரையுலகில் நூற்றுக்கணக்கில் இசை அமைப்பாளர்கள் உள்ளனர். அதில் முன்னணி இசையமைப்பாளர்களாக வெகு சிலரே ரசிகர்களால் கவனம் ஈர்க்கப்படுகின்றனர். அந்த வகையில், இசை எனும் உலகில் முக்கியமானவர் சந்தோஷ் நாராயணன். தமிழில் தினேஷ் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டக்கத்தி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சந்தோஷ் நாராயணன். இதைத் தொடர்ந்து தமிழில் அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.
சூது கவ்வும், பில்லா ரங்கா, ஜிகர்தண்டா, மெட்ராஸ், 36 வயதினிலே, காதலும் கடந்து போகும், பைரவா, மேயாத மான், காலா, ஜிப்சி, பென்குயின், பாரிஸ் ஜெயராஜ், கர்ணன் என பல படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். தமிழில் ரசிகர்களை கவர்ந்த சந்தோஷ் நாராயணன் அடுத்து தெலுங்கு, ஹிந்தி என அடுத்தடுத்து பல மொழிப் படங்களுக்கு அவர் இசை அமைத்திருக்கிறார். தற்போது வரை 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு அவர் இசை அமைத்துள்ளார்.
பிரபாஸ், கமல்ஹாசன் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் கல்கி படத்திற்கு சந்தோஷ் நாராயணன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில், சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நீயே ஒளி என்ற தலைப்பில் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். இன்று இரவு 3 மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும், 30 ஆயிரம் பேர் இதில் பங்கேற்க உள்ள நிலையில், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.