விலங்கு வெப் சீரிஸ் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின் அடுத்த வெப் சீரிஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2022-ல் விமல் நடிப்பில் விலங்கு எனும் வெப் சீரிஸ் வெளியானது. இதனை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருந்தார். இதில் விமலுடன் இணைந்து இனியா, முனீஸ்காந்த், பால சரவணன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். குற்றப்புனைவு சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து பிரசாந்த் பாண்டியராஜ் அடுத்ததாக சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு வெப் தொடரை இயக்க உள்ளார். இதில் நடிகர் கதிர், திவ்யபாரதி, பூர்ணிமா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கேங்ஸ்டர்- திரில்லர் ஜானரில் இந்த வெப் தொடர் உருவாகிறது. இந்த வெப் தொடருக்கு லிங்கம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விரைவில் இது ஹாட் ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் நடிகர் கதிர், பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்கு பிறகு மாணவன் என்ற புதிய படத்திலும், சுழல் 2 என்ற வெப் தொடரிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.