கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல்காந்தி இருந்தது போல, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்களுக்கு ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தான் பிரச்சார பீரங்கி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்துள்ளார்.

தமிழக பாஜக இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு பிரிவின் சார்பில் 10 லட்சம் மரங்கள் நடும் தொடக்க நிகழ்ச்சி பாலவாக்கம் கடற்கரை அருகே நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று மரங்களை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கிய பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, “இலங்கையில் 13 வது சட்ட திருத்தம் பெயர் அளவிற்கு மட்டும் தான் உள்ளது. 13 வது சட்ட திருத்தம் விவகாரம் தொடர்பாக இன்று இலங்கை பயணம் மேற்கொள்கிறேன். இலங்கை மீனவர்கள் பிரச்சனையில் பாஜக அரசு திறம்பட கையாண்டு வருகிறது.பாஜக அரசு வந்த பிறகு மீனவர்கள் மீதான துப்பாக்கி சூடு குறைந்துள்ளது.
இலங்கையில் தமிழக மீனவர்கள் 111 படகுகள் உள்ளது, அதனை விடுவிக்க இலங்கை மீன்வளத்துறை அமைச்சருடன் பேச உள்ளோம். கொழும்பு- ஜாப்னா இடையே ரயில் சேவை வர உள்ளது. 2.1பில்லியன் டாலர் இந்திய அரசு தமிழர்களின் நலனுக்காக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாப்னாவில் இந்திய அரசு சார்பில் கட்டப்பட்ட கலாச்சார மையத்தினை இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே திறந்து வைக்கிறார். இதில் மத்திய இணை அமைச்சர் எல். முருகனுடன் நானும் பங்கேற்கிறேன் என தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக அதிமுகவிற்காக பிரச்சாரம் செய்யும். ஈரோடு கிழக்கில் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்க அதிமுக அழைப்பு கொடுத்திருந்தது. நான் இலங்கை செல்ல இருப்பதால் எங்கள் கட்சி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்பார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பார்த்து முதல்வர் பயப்படுகிறார். அதற்காகத்தான் மொத்த திமுகவினரையும் ஈரோட்டில் களமிறக்கி உள்ளார். இடைத்தேர்தல் குறித்து முதல்வர் பயத்தில் உள்ளார். அதனால் தான் தமிழ்நாடு முழுவதும் உள்ள திமுகவினரை ஈரோட்டிற்கு வர வழைத்துள்ளார். ஆளுங்கட்சி இடைத்தேர்தலில் இந்த அளவிற்கு பயந்ததாக சரித்திரம் இல்லை.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் பிரச்சார பீரங்கியாக ராகுல் காந்தி இருந்தார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பிரச்சார பீரங்கியாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இருக்கிறார். அவர் பேச ஆரம்பித்தால் எங்களுக்கு ஓட்டு தானாக வரும். ஈரோடு இடைத்தேர்தலில் பன்னையார் குடும்பம் வெற்றி பெறுதா? சாமானியன் வெற்றிபெறுகிறாரா?என்று விரைவில் தெரியவரும்” எனக் கூறினார்.
