தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தில் திமுகவின் தெளிவான நிலைப்பாடு, ராகுல் காந்தி – வைகோ – விஜய் இடையிலான புத்தக வெளியீட்டு அரசியல், த.வெ.க தலைவர் விஜய்யின் பின்னணி, அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் கார்ப்பரேட் நுகர்வோர் கலாச்சாரம் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகரும் அரசியல் விமர்சகருமான முனைவர் வி. பொன்ராஜ் அவர்கள் விரிவான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
தொகுதி மறுவரையறையும் திமுக – பாஜக உறவும்
திமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்கப் போகிறது என்ற விமர்சனங்களைப் பொன்ராஜ் முற்றுமுழுதாக மறுத்துள்ளார். “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மக்கள் தொகையை மட்டும் அளவுகோலாக வைக்கக் கூடாது; மாநிலங்களின் ஜிடிபி, வரி பங்களிப்பு, குடும்பக் கட்டுப்பாடு சாதனை உள்ளிட்ட பிற காரணிகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதில் திமுக தெளிவாக உள்ளது.”

”இதற்காக தென்மாநில முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளைக் கூட்டி மாநாடு நடத்தி டெல்லி மசோதாவை எதிர்த்தது திமுகதான். தேசிய அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்திய திமுக, எதற்காகத் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கப்போகிறது?” என்று கேள்வி எழுப்பினாா். மேலும், “2024-இல் பாஜகவுக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்காதபோதே, இந்தியா கூட்டணியை விட்டு வெளியேறி பாஜகவுக்கு ஆதரவு அளித்து எம்பி-க்களை அமைச்சராக்கி இருக்க முடியும். அதைச் செய்யாத திமுக, 2029-இல் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை.”
ராகுல் காந்தி – வைகோ – விஜய்: “அரசியல் முரண்பாட்டின் உச்சம்!”
வைகோவின் நாடாளுமன்ற உரைகள் அடங்கிய புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிடுவதும், அதை விஜய் பெற்றுக்கொள்வதும் குறித்துப் பேசிய பொன்ராஜ், “திமுகவின் ஆதரவோடு எம்பியாகி, நாடாளுமன்றத்தில் காங்கிரஸை எதிர்த்துப் பேசியவர் வைகோ. ஆனால், அதே காங்கிரஸின் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட, அதை விஜய் பெற்றுக்கொள்வது வைகோவின் ‘பச்சோந்தித்தனத்தின்’ உச்சம். “நாடாளுமன்ற நடைமுறைகள் பற்றிய அடிப்படைப் புரிதலும் அறிவும் இல்லாத விஜய், அந்தப் புத்தகத்தைப் பெற்றுக்கொள்கிறார். அரசியல் தர்மத்தைக் காற்றில் பறக்கவிட்டு வைகோ இப்படிச் செயல்படுவது மிகவும் தரம்தாழ்ந்த செயலாகும்.
“அமித் ஷா இல்லையென்றால் த.வெ.க என்ற கட்சியே கிடையாது!”
தமிழக அரசியல் களம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) பற்றி பொன்ராஜ் சுட்டிக்காட்டியதாவது, “இன்றைக்கு எடப்பாடி பழனிசாமியால் அதிமுக வலுவிழந்து, மெல்ல மெல்ல த.வெ.க-வாக மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் அதிமுகவும் திமுகவும் இணைந்தால் கூட அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. “மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தயவும் திட்டமிடலும் இல்லை என்றால் ‘த.வெ.க’ என்ற கட்சியே கிடையாது. தங்களுக்குப் பின்னால் உள்ள அமித் ஷாவின் பலத்தினால் தான் வெற்றி பெற்றுவிட்டு, இவர்கள் சுயசார்புடன் செயல்படுவது போலப் பேசிக் கொள்கிறார்கள். 
கம்யூனிசம், இடதுசாரிகள் மற்றும் கார்ப்பரேட் சூழல்
இன்றைய இளைஞர்கள் மற்றும் சமூகக் கட்டமைப்பு குறித்துப் பொன்ராஜ் பகிர்ந்து கொண்ட பார்வைகள், “இன்றைய இளைஞர்களிடம் கார்ல் மார்க்ஸ், பெரியார் அல்லது அம்பேத்கர் பற்றிய சிந்தனைகளும் வாசிப்பும் வெகுவாகக் குறைந்துவிட்டன. கூட்டுச் சிந்தனை (Collective consciousness) அழிந்து, தனிநபர் நுகர்வோர் சமூகமாக (Individualistic consumerist society) உலகம் மாறிவிட்டது. “இளைஞர்களைச் சேமிக்க விடாமல், ஷார்ட்ஸ், ரீல்ஸ், போதைப்பொருள், பிராண்டட் உடைகள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. சர்வதேச வலதுசாரி கார்ப்பரேட்டுகளின் ஒரு அங்கம் தான் பாஜக; அவர்களின் ஒரு தொங்கு சதை தான் த.வெ.க. தமிழகத்தில் இயங்கும் மாற்றுக் கட்சிகள் அனைத்தும் மக்களின் உண்மையான நலனுக்காக இயங்காமல், டெல்லி மேலிடத்தின் பின்னணியிலும், கார்ப்பரேட் மயமாக்கப்பட்ட விளம்பர அரசியலின் மூலமுமே இயங்கி வருகின்றன என பொன்ராஜ் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
