நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைக் கண்டித்து டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டதுடன், அவரது மூக்கில் காயமும் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், வழக்கமாக ராகுல் காந்தியால் ‘அண்ணன்’ என்று அன்போடு அழைக்கப்படும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து எந்தவொரு கண்டனமும் தெரிவிக்காமல் மௌனம் சாதிப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. மேலும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகி திமுக வெகுதூரம் சென்று விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
டெல்லியில் வெடித்த மாணவர்கள் போராட்டம் & தடியடி
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி முதல் தீவிரப் போராட்டம் நடைபெற்று வந்தது. இப்போராட்டத்திற்கு ஆதரவளித்த சமூக ஆர்வலர் சோனம் வாங்கசுக், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் நாளில் பேரணி செல்லப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இருப்பினும், திட்டமிட்டபடி நாடு முழுவதிலும் இருந்து திரண்ட பல்லாயிரக்கணக்கான மாணவர்களும் இளைஞர்களும் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் பேரணியைக் கலைக்க முயன்றனர். இதில் காயமடைந்த ஏராளமான மாணவர்கள் ஆர்.எம்.எல். (RML) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பிரதமர் இல்லம் முற்றுகை & ராகுல் காந்தி கைது
மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், நீட் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. அரசு இதற்குச் செவிசாய்க்காத நிலையில், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தலைமையில் தலைவர்களும் தொண்டர்களும் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்தை நோக்கித் திடீரெனப் பேரணியாகச் சென்றனர்

உளவுத்துறைக்கும் டெல்லி போலீசாருக்கும் எவ்விதத் தகவலும் கிடைக்காத வகையில், பிரதமர் இல்லத்தின் பிரதான வாசல் வரை சென்று தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விரைந்து வந்த பாதுகாப்புப் படையினர், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றிப் பலவந்தமாகக் கைது செய்தனர். இந்தத் தள்ளுமுள்ளுவின் போது ராகுல் காந்தியின் மூக்கில் அடிபட்டு ரத்தம் சிந்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.
முதலமைச்சர் விஜய் கண்டனம்; மௌனம் காக்கும் ஸ்டாலின்!
ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கும், அவர் மீதான தாக்குதலுக்கும் தமிழக முதலமைச்சரும், தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய் உடனடியாகத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்தார். ஆனால், ராகுல் காந்தியை எப்போதும் தனது சொந்தச் சகோதரராக முன்னிறுத்தும் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இச்சம்பவம் குறித்துச் சுத்தமாகக் கண்டுகொள்ளாமல் மௌனம் காத்து வருகிறார். அதேபோல, தமிழக எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலினும், ராகுல் காந்தி கைது குறித்து எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக தரப்பில் இருந்து ஒருவர்கூட ராகுல் காந்தி கைதுக்கு இதுவரை நேரடி கண்டனம் தெரிவிக்கவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் போராட்டத்திற்கு ஆதரவு என்றும் பொதுவான அறிக்கையை மட்டுமே ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதேபோல உதயநிதி ஸ்டாலினும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு மட்டுமே கண்டனம் தெரிவித்திருந்தார்.
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் விரிசலா?
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகியதை, திமுக தலைவர்கள் தங்களுக்குச் செய்யப்பட்ட துரோகமாகவே பார்க்கிறார்கள் என்றும், அதன் வெளிப்பாடே ராகுல் காந்தி கைது செய்யப்பட்டு மூக்கில் காயம் அடைந்த பின்னரும் ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காமல் விலகி நிற்பதற்குக் காரணம் என்றும் அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ‘என் தம்பி ராகுல்’ என்று மேடைகளில் மேளதாளத்தோடு பேசி வந்த ஸ்டாலின், டெல்லியில் ராகுல் காந்திக்கு நடந்த இந்தச் சம்பவத்திற்கு ஒரு சிறிய அறிக்கை கூட வெளியிடாதது, இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு முற்றிலுமாக முறிந்துவிட்டதையே தெளிவுபடுத்துவதாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வருகிறது.
