தமிழ்நாடு அரசு ரெனால்ட், நிசான் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
சென்னை அடுத்த ஒரகடத்திலுள்ள ரெனால்ட், நிசான் நிறுவன விரிவாக்கத்திற்கான ரூபாய். 5,300 கோடி முதலீடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது.

முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு என்ற திட்டத்தின்கீழ் தெற்காசியாவில் தொழில் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ஒரகடத்தில் திமுக ஆட்சி காலத்தில் 2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரெனால்ட், நிசான் நிறுவனம், அதனை விரிவாக்க திட்டமிட்டுள்ளது.
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிசான் கார் நிறுவனமும், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் இணைந்து கூட்டாக சென்னை ஒரகடத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 610 ஏக்கரில் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார் சந்தைகளுக்கான கார் உற்பத்தி செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசுக்கும் ரெனால்ட், நிசான் நிறுவனத்திற்குமிடையே 5,300 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தானது. எம்.ஆர்.சி நகர் தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன இயக்குனர் விஷ்ணு ஐஏஎஸ் மற்றும் நிசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி அஸ்வானி குப்தா ஆகியோர் முதலமைச்சர் ஒப்பந்தங்களை பரிமாறிக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய நிசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி அஸ்வானி குப்தா, ரெனால்ட் நிசான் நிறுவனத்தில் இதுவரை 2.4 மில்லியன் கார்கள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக நிசான், ரெணால்ட் இணைந்து 2 மின் வாகனம் உட்பட புதிதாக 6 மாடல் கார்களை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். 5,300 கோடி முதலீடு செய்யவுள்ளதாகவும், இதன்மூலம் வாகன உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகுமெனவும் தெரிவித்தார்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விரிவாக்கத்திற்கான பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டு, 2025ம் ஆண்டில் தனது மின்சார வாகனத்தை ரெனால்ட், நிசான் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்திய அளவில் கார் உற்பத்தியில் 3% உற்பத்தி வகிக்கும் ரெனால்ட் மற்றும் நிசான் கார் நிறுவனங்கள் சென்னை ஒரகடம் தொழிற்சாலையில் உற்பத்தி மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது 5,300 கோடி மதிப்பீட்டில் ஆலை விரிவாக்கம் மற்றும் புதிய கார்கள் உற்பத்தி மூலம் சந்தையில் கார் உற்பத்தி திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ரெனால்ட் நிறுவனம் கார் சந்தையில் தனது சிறப்பு வாய்ந்த படைப்பான டஸ்டர் காரினை நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மீண்டும் தயாரிக்க உள்ளது.
