spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற நபர் கைது

தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற நபர் கைது

-

- Advertisement -

குவைத் நாட்டிற்கு வேலைக்காக சென்று விட்டு, அங்கிருந்து இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன் நாட்டிற்கு சென்ற கடலூர் பயணியை சென்னை விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, குவைத் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டு இருந்தனர்.

அப்போது, கடலூரைச் சேர்ந்த நைமூர் ரகுமான் ஹபிபுல்லா (37), என்பவர் வேலைக்காக குவைத் நாட்டிற்கு செல்ல வந்திருந்தார். அவருடைய பாஸ்போர்ட், ஆவணங்களை, குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தனர். அப்போது அவர் ஏற்கனவே குவைத்துக்கு வேலைக்காக சென்று விட்டு, அங்கே இருந்து ஏமன் நாட்டுக்கு சென்றுள்ளது தெரியவந்தது.

we-r-hiring

ஏமன், லிபியா ஆகிய இரண்டு நாடுகள், இந்திய அரசால் பாதுகாப்பு காரணங்களுக்காகதடை செய்யப்பட்ட நாடுகள். கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து, இந்த தடை உத்தரவு அமுலில் உள்ளது. தடை செய்யப்பட்ட இந்த இரண்டு நாடுகளுக்கும், இந்தியர்கள் யாரும் சொல்ல கூடாது. தடையை மீறி, தடை செய்யப்பட்ட இந்த நாடுகளுக்கு செல்லும் இந்தியர்கள் மீது குற்றவியல் சட்ட முறைகள் படி, வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று, இந்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் உத்தரவை மீறி இவர் ஏமன் நாட்டிற்கு சென்று வந்திருந்து, அவருடைய பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களில் ஏமன் நாட்டு குடியுரிமை முத்திரை பதிக்கப்பட்டுள்ளது மூலம் உறுதியாகி உள்ளது. இதை அடுத்து பயணி நைமூர் ரகுமான் ஹபிபுல்லா பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது தான் குவைத்தில் பணியில் இருந்த போது, பணியின் நிமித்தமாக இரு முறை ஏமன் நாட்டிற்கு சென்று வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். அதே நேரத்தில் தான் பணியின் நிமித்தமாக சென்றதாகவும், அங்கு தான் பிரச்சனைக்குரிய யாரையும் சந்திக்கவில்லை என்றும் கூறினார். ஆனாலும் குடி உரிமை அதிகாரிகள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

கடலூர் பயணி நைமூர் ரகுமான் ஹபீபுல்லாவை கைது செய்தனர். அவர் மீது இந்திய அரசின் தடை உத்தரவை மீறி, தடை செய்யப்பட்ட நாடுகளுக்கு சென்றது, பாஸ்போர்ட்டை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்து மேல் நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். அவருடைய செல்போன் பதிவுகளை ஆய்வு செய்வதோடு, எந்த வேலைக்காக குவைத் செல்கிறார்? என்றும் விசாரணை நடத்துகின்றனர்.

MUST READ