HomeBreaking Newsபத்திரிகையாளர் விஜயன் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு: செல்போன் பறிமுதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும்...

பத்திரிகையாளர் விஜயன் விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பு: செல்போன் பறிமுதலுக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!

-

- Advertisement -

புதியதலைமுறை தொலைக்காட்சி நெறியாளரும், மூத்த பத்திரிகையாளருமான திரு. விஜயன் அவர்களை விசாரணை என்ற பெயரில் நள்ளிரவில் அலைக்கழித்து, சட்ட விதிகளைப் பின்பற்றாமல் அவருடைய செல்போனைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையின் நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

விஜயன்

we-r-hiring

பின்னணி என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் திரு. இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு என்பவர் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் விசாரணை – செல்போன் பறிமுதல்

இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக நேற்று (15.07.2026) நேரில் ஆஜராக வேண்டும் என்று, வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக்குழு புதியதலைமுறை தொலைக்காட்சி அலுவலகத்திற்குச் சென்று பத்திரிகையாளர் விஜயனிடம் நேரடியாக சம்மன் வழங்கியது.

சம்மன் வழங்கிய கையோடு, நேற்றிரவே காவல் நிலையத்திற்கு வர வேண்டும் என்று காவல்துறையினர் வற்புறுத்தியுள்ளனர். அதன் பேரில், நேற்று இரவு 10 மணியளவில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜரான விஜயனிடம், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டு, நள்ளிரவு 12.30 மணியளவில் விசாரணை முடிக்கப்பட்டது.

அதன்பின் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்ற விஜயனை, நள்ளிரவு 2 மணியளவில் மீண்டும் காவல் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். அப்போது, காவல்துறையினர் எந்தவித சட்ட விதிகளையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் அவருடைய செல்போனைப் பறிமுதல் செய்துள்ளனர்.

விடிய விடிய அலைக்கழிப்பு

இந்நிலையில், இன்று (16.07.2026) காலையும் பத்திரிகையாளர் விஜயனை மீண்டும் விசாரணைக்காக காவல்துறையினர் அழைத்துள்ளனர். விசாரணைக்குச் சென்ற அவர் இதுவரை வீடு திரும்பாமல் காவல் நிலையத்திலேயே வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம்

“எந்த வழக்காக இருந்தாலும் விசாரணைக்காகவும், சாட்சியம் வழங்கவும் சம்பந்தப்பட்டவர்களை அழைக்க காவல்துறையினருக்கு உரிமை உள்ளது. ஆனால், அதை சட்டத்தின் வழியில், அதன் வரம்பிற்கு உட்பட்டு செய்ய வேண்டும். விசாரணைக்கு வந்த பத்திரிகையாளரின் செல்போனைப் பறிமுதல் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

காவல்துறையின் இந்த அராஜக நடவடிக்கை பத்திரிகையாளர்களை மிரட்டி, பத்திரிகை சுதந்திரத்தை நசுக்கும் முயற்சியாகவே பார்க்க முடிகிறது.”

— சென்னை பத்திரிகையாளர் மன்றம்

முதலமைச்சருக்கு கோரிக்கை

விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளரை மணிக்கணக்கில் காக்க வைத்திருப்பது மற்றும் விதிகளுக்குப் புறம்பாக செல்போனைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையைக் கண்டித்துள்ள மன்றம், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

பத்திரிகையாளர் விஜயனை உடனடியாக விடுவிக்கவும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனைத் திரும்ப ஒப்படைக்கவும், விசாரணை என்ற பெயரில் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்தவும் முதலமைச்சர் உடனடியாக உத்தரவிட வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

MUST READ